You cannot copy content of this page

வீரட்டேசுவரர் கோவில், திருக்குறுக்கை

வீரட்டேசுவரர் கோவில், திருக்குறுக்கை

சோழநாட்டு (வடகரை)த் தலம்

மக்கள் வழக்கில் ‘கொருக்கை’ என்று வழங்குகிறது.

மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை – மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டி ‘கொண்டல், பாலந்தாண்டி, ‘கொண்டல்’ ஊரையடைந்து, ‘கொருக்கை’ என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி.மீ. சென்று (குறுகியபாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம். கார், வேன், பஸ் செல்லும். மயிலாடுதுறை – மணல்மேடு நகரப் பேருந்து உள்ளது.

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று, மன்மதனை எரித்த தலம். “ஆடல் அநங்கனை அமுது செய்த செங்கணான் இருக்கை ஈது” என்பது திருவிளையாடற்புராணத் தொடர். இத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் எனப்படும்.

தருமையாதீனத் திருக்கோயில். கோயில்வரை வாகனங்களில் செல்லலாம். இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, ‘தீர்க்கபாகு’ என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித்தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது எண்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது தலவரலாற்றுச் செய்தி. ‘குறுங்கை முனிவர்’ இவர் பெயரால் இத்தலம் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘குறுக்கை’ என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.

யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்கள். இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்ட தலம்.இறைவன்-வீரட்டேஸ்வரர்இறைவி-ஞானாம்பிகைதலமரம்-கடுக்காதீர்த்தம்-சூல தீர்த்தம் – கோயிலின் முன்பு உள்ளது.

அப்பர் பாடல் பெற்றது.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சூல தீர்த்தம் உள்ளது.

மேற்கு நோக்கிய சந்நிதி. ராஜகோபுரத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி, சதாசிவர் முதலிய பலவகைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் உருவம் – சிற்பம் காணத்தக்கது.

வாயிலில் உள்புறமாகத் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே – சந்நிதிகள் ஏதுமில்லை. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உளது. வௌவால் நெத்தி மண்டபம். இம் மண்டபத்தில் இடப்பால் அம்பாள் – ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். மண்டபத்தின் ஒருபுறம் பள்ளியறை உள்ளது.

வாயிலைக் கடந்து அடுத்த மண்டபத்தையடைந்தால் இடப்பால் வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து கஜலட்சுமி தரிசனம். பக்கத்தில் தலமூர்த்தியாகிய ‘காம தகன மூர்த்தி’ சந்நிதி உள்ளது. இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமுத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் இம்மூர்த்தி காட்சியளிக்கின்றார். களிற்றுப்படிகள் உள்ளன. சந்நிதியின் உள்ளே பக்கத்தில் உமையும் எதிரில் ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகளும் உள. சுவாமிக்குப் பக்கத்தில் சனகாதி முனிவர்களின் திருமேனிகள் உள்ளன. மன்மதன் கையில் கரும்பு வில்லும், ரதியின் கையில் கிளியும் உள்ளன.

காமதகனவிழா மாசிமகத்தன்று, இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது. காமனைத் தகனம் செய்த இடம் ‘விபூதிக்குட்டை’ என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாகவேயுள்ளது. உள் பிராகாரத்தில் தலமரம் ‘கடுக்கா’ உள்ளது. குறுங்கை விநாயகர் – தலவிநாயகர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பக்கத்தில் தீர்த்தபாகுமுனிவர் உருவம் உளது. அடுத்து, நின்ற கோலத்தில் ‘சோகஹரேஸ்வரர்’ காட்சிதரும் சந்நிதியுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத்துர்க்கை, பிரமன் (இம்மூர்த்தத்தின் மேலே ரதி, இறைவனை வேண்டுவது போல சுதையாலான சிற்பம் உள்ளது.) லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது.

உள்பிராகார வலம் முடித்துப் படிகளேறி, மண்டபத்தை அடையலாம். மண்டபத்தின் வலப்பால் நவக்கிரக சந்நிதி. வாயிலைக் கடந்து உள்சென்றால் இடப்பால் நடராசசபை உள்ளது. எதிரில் வாயில் உள்ளது. இச் சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள. இச் சபை, ‘சம்பு விநோத சபை’, ‘காமனங்கநாசனி சபை’ எனப் பெயர் பெறும்.

துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. சதுர ஆவுடையார் – உயர்ந்த பாணம், மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. நிறைவான தரிசனம். நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. பெருவிழாக்களும் மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ்செய்து
ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்றதென்று தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.”

‘நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்
கறை நிறத்தெலிதன் மூக்குச் சுட்டுடக்கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவானு லகுமெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.’
                                                            (அப்பர்)
                                                       – மணஞ்சேர்ந்து

வாரட்ட கொங்கை மலையாளொடுங் கொறுக்கை
வீரட்டமேவும் வியனிறைவே.                          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
கொருக்கை
நீடூர் அஞ்சல் – (வழி) நீடூர்
மயிலாடுதுறை வட்டம் – நாகப்பட்டினம் மாவட்டம் 609 203.

Scroll to Top