You cannot copy content of this page

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருநல்லூர்

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருநல்லூர்

சோழநாட்டு (தென்கரை)த் தலம்

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருவடி சூட்டியதும், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதுமாகிய அற்புதத் தலம்.

ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ளவும், வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு வீசினார். தேவர்கள் அஞ்சினர். ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்த; தக்கசமயமென்றெண்ணி, வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் திருநல்லூரிலும், ஆவூரிலும் விடுத்தனன். அம்மலைச் சிகரமே நல்லூரில் இறைவன் எழுந்தருளியுள்ள மலையாகும். இச்சிகரத்திற்கு – மலைக்குச் ‘சுந்தரகிரி’ என்ற பெயர; தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

திருச்சித்திமுற்றத்துச் சிவக்கொழுந்தீசரை வழிபட்டு, ‘கோவாய் முடுகி’ என்ற பதிகம் பாடி, தனக்குத் திருவடி தீட்சை செய்யுமாறு அப்பர் வேண்ட, அவரை இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளி, “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம், என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டி”யருளினார். இச்செய்தியை நம்பியாண்டார் நம்பிகளும் தாம் அருளியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியுள் “நற்றவன் நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்” எனக் குறித்துள்ளார். இதுபற்றியே இன்றும் இத்தலத்தில் சடாரி போன்று திருவடி சூட்டப்படுகின்றது.

அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் அவருக்குக் காட்சி வழங்கி ஆட்கொண்டருளிய (முத்தியருளிய) அருட்சிறப்பும் உடையது இத்தலம். மிகப்பழமையான, அருமையான, சிறப்புமிக்க திருக்கோயில்.இறைவன்-பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.இறைவி-கிரிசுந்தரி, பர்வதசுந்தரி, கல்யாணசுந்தரி.தலமரம்-வில்வம்தீர்த்தம்-சப்தசாகர தீர்த்தம்.

கோயிலின் முன்னால் உள்ளது. படித்துறைகளையுடையது. குளக்கரையில் ஒருபுறம் அமர்நீதி நாயனார் மடாலயம் உள்ளது. சற்றுகிலமாகவுள்ளது. அக்குடும்ப வழிவந்தோர் அமர்நீதி நாயனார் விழாவை இம்மடத்தில் ஆண்டுதோறும் நடத்துகிறார்கள்.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

ஐந்து நிலைகளையுடைய அழகான ராஜகோபுரம் நம்மை அழைக்கின்றது. உள்ளே விசாலமான இடம். கவசமிட்ட கொடிமரம் உள்ளது. முன்பு விநாயகர் உள்ளார். அடுத்து வடபால் வசந்த மண்டபமும், தென்பால் அமர்நீதியார் துலையேறிய துலா மண்டபமும் ள்ளன. இங்குள்ள அஷ்டபூஜ காளி பிரசித்தி பெற்றது.

உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது – கீழே கல்கட்டிடம் மேலே சுதை வேலைப்பாடுடையது. உள்ளே நுழைந்தால் நேரே காசி ிநாயகர் தரிசனம். வலம்பர, பாணலிங்கம், விசுவநாதர் சந்நிதிகள்.

சோமாஸ்கந்தர் மண்டபமும், முருகன் சந்நிதியும் உள்ளன. வடபால் அமர்நீதி நாயனார், மனைவி, குழந்தை, குந்திதேவி முதலியோரின் ருவங்கள் உள்ளன. மாடக்கோயிலில் கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், அடுத்து யோகத்தின் மேன்மையை விளக்கும் விநாயகரின் மற்றொரு உருவம், தக்ஷிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது அழகான நடராசசபை.

மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது. ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை – ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் வழங்குகின்றது. பிருங்கி முனிவர், வண்டு வடிவமாய் வழிபட்டதால் இச்சிவலிங்கத்தில் துறைகள் உள்ளன. சதுர ஆவுடையார் சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலங்காட்டி யருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதைவடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரமனும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். மூலவருக்குப் பக்கத்தில் அகத்தியலிங்கம் உள்ளது.

மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் – சுயம்பு மூர்த்தி. இத்திருமேனி முழுவதும் வண்டுகள் துளைத்த அடையாளங்கள் உள்ளன. மூலவர் பிராகார வலம்வரக் குறுகலான வழியுள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதி. மூலவர் – சிவலிங்கத் திருமேனி பார்ப்பதற்கு ஓர் உலோகம் போலக் காட்சி தருகின்றது. (இக்குறிப்பை எழுதுவதற்காகச் சென்று தரிசித்த போது சிவலிங்கம் பித்தளை வடிவமாகக் காட்சி தந்ததைக் கண்ணாரக்கண்டு தரிசித்தேன்.)

சந்நிதியில் பலகணி உள்ளது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வாயிலின் பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதி. நின்ற திருக்கோலம்.

இத்தலத்தில் உள்ள சப்த சாகரதீர்த்தம் மிக்க பெருமையுடையது. இதில் நீராடினால் உடற்பிணி நீங்கப் பெறுவர். குந்திதேவி, கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் வைத்துவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமாகத் தௌமிய முனிவர் சொற்படி இத்தலத்தையடைந்து, இங்கு இருந்த உரோமசர் முனிவரைப் பார்த்துத் தனக்குக் கழுவாய் கூறுமாறு வேண்டினாள். அவரும் “நாளை மாசிமகம். சப்த சமுத்திர ஸ்நானம் செய்க” என்றார். “நாளைக்குள் எங்ஙனம் ஏழுகடல்களில் ஸ்நானம் செய்ய முடியும்?” என்று, அவளுமள் இறைவனை வேண்ட, அவள் வேண்டுதலையேற்ற இறைவனும் இத்தீர்த்தத்தினை ஏழுகடல்களாகப் பாவித்து நீராடுமாறு அருள, குந்தியும் அவ்வாறே நீராடிப் பாவம் தீரப்பெற்றாள் என்று சொல்லப்படுகிறது. (கோயிலுள் குந்தியின் உருவம் உள்ளது மேலே குறிக்கப்பட்டுள்ளது.) இதனால் இத்தீர்த்தம் ‘சப்தசாகர தீர்த்தம்’ என்று பெயர் பெற்றது.

முசுகுந்தன், இந்திரனிடமிருந்து தியாகராஜப் பெருமானைப் பெற்றுத் திருவாரூர் செல்லும்போது இத்தலத்தில் மூன்று நாள்கள் இருந்து, தியாகராஜப் பெருமானை எழுந்தருளுவித்துப் பூசித்து வழிபட்டான் என்னும் பெருமையுடைய இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்டதாகும்.

கமலைவைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டுள்ள திருநல்லூர்ப் புராணம். உரைநடைப்படுத்தி, திருவாவடுதுறை ஆதீனத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“அலைமல்கு தண்புனலும் பிறையஞ்சூடி அங்கையில்
 கொலைமல்கு வெண்மழுவும் அனலும் ஏத்துங்கொள்கையீர்
 சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
 மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.”       (சம்பந்தர்)

“நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
 நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
 சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
 செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்துவானோர்
 இனந்துருவி மணிமகுடத்தேறத் துற்ற
 இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி
 நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்
 நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே.”             (அப்பர்)

“நன்மைபெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரில்
 மன்னுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்பொழுதில்
 உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர்தம்
 சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.”
                                                          (பெ. புரா)
                                                         – சீலத்தர்

சொல்லூரடியப்பர் தூய முடி மேல்வைத்த
நல்லூர் அமர்ந்த நடுநாயகமே.                    (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

திருநல்லூர் கிராமம் – அஞ்சல்
(வழி) சுந்தரப்பெருமாள் கோயில்
வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம். 614 208.

Scroll to Top