You cannot copy content of this page

வீரட்டேஸ்வரர் கோயில், திருவதிகை

வீரட்டேஸ்வரர் கோயில், திருவதிகை

நடுநாட்டுத் தலம்

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.

பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பாதையில் சென்றால் திருவதிகையை அடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும். பண்ருட்டி இருப்புப்பாதை நிலையம்.

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச்செயல் நிகழ்ந்தது. ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையர் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த தலம். சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூரை) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, “ஆற்றேன் அடியேன்” என்று “கூற்றாயினவாறு” பதிகம் பாடிச் சூலை நீங்கப் பெற்ற அற்புதத்தலம். சுருங்கச் சொல்லின், சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய ‘மனவாசகங்கடந்தாரின்’ அவதாரத் தலம் இதுவே. இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் – திருவடி தீட்சை பெற்றதும் ; பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் ; இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம்.

அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப், பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. தென்கங்கை எனப்படும் கெடிலநதி பக்கத்தில் ஓடுகின்றது.இறைவன்-வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.இறைவி-திரிபுரசுந்தரிதலமரம்-சரக்கொன்றைதீர்த்தம்-கெடிலநதி

மூவர் பாடல் பெற்றது.

மிகப் பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்கு எதிரில் கருங்கல் தூண்கள் மொட்டையாக நின்று கொண்டிருக்கும் நிலையில் திலகவதியார் மடம் காட்சியளிக்கிறது. பதினாறுகால் மண்டபத்தின் பக்கத்தில் அப்பர் சுவாமிமடம் – திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது உள்ளது.

உயர்ந்த ராஜகோபுரம். ஏழுநிலைகளையுடையது. கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன. வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் கஜசம்ஹாரகோலம்.

வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன. மிதித்தேறும் படியின் இருபுறத்திலும் அழகான நடன மாதரின் உருவங்கள். அப்பப்பா ! வைத்த கண்களை வாங்காமல் பார்த்தாலும் வேட்கை தணியவில்லை.

உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தின் இடப்பால் ‘சக்கரதீர்த்தம்’ எனப்படும் திருக்குளம் உள்ளது. இம்மண்டபத்தில் புகும்போது முதலில் உள்ள இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளன. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்கின்றனர். இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன் முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பாக நடத்தினார் என்பர்.

உள்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம் கொடிமரத்து விநாயகர் தரிசனம், முன்னால் நந்தி. வலப்பால் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதைத் தேவசபை என்கின்றனர். நடராச அபிஷேகம் இம்மண்டபத்தில் நடைபெறும். உள்கோபுரம் தாண்டினால், உயரமான நந்தி உள்ளது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். வலமாக வரும்போது அப்பர் சந்நிதி (உற்சவமூர்த்தி) உள்ளது. சேக்கிழார் முதலாக அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் உள்ளன. அடுத்துத் தலமரம் சரக்கொன்றை உள்ளது. பக்கத்தில் திலகவதியார் சந்நிதி. அடுத்து சனீஸ்வரர், அம்பாள திருமேனிகள் உள. முன்னால் பெரிய சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அடுத்து அப்பர் சந்நிதி. மூலமூர்த்தம் உள்ளது. அமர்ந்த திருக்கோலம் – சிரித்த முகம் – தலை மாலை கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. முன் மண்டபம், எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.

பிராகாரத்தில் அடுத்து விநாயகர் சந்நிதியும் பக்கத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்) உள்ளன. வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. பக்க வாயிற்படிகள் வழியே சென்று, முன் மண்டபத்தையடைந்து, துவாரபாலகரை வணங்குகிறோம். திரிபுராந்தகர் உற்சவ சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. உள் மண்டபத்தை அடைந்ததும் நேரே மூலவர் சந்நிதி. மூலவர் – சிவலிங்கத் திருமேனி. கிழக்கு நோக்கியது. பெரிய திருமேனி – பெரிய ஆவுடையார். சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பின்னால் சுவாமி அம்பாள் உருவங்கள் சோமாஸ்கந்த வடிவில் புடைமூர்த்தமாகச் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன – கல்யாண திருக்கோலம். தெவிட்டாத தரிசனம். அதிகைக் கெடிலநாதன் அருளைப் பருகப் பருகப் பசி ஆறவே ஆறாது. எத்தனை நேரம் நின்று தரிசித்தாலும் பிரிய மனம் வரவில்லை.

இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பிட்சாடனர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, அஸ்திரதேவர், திலகவதியார், நால்வர் ; சண்டேசுவரர் முதலிய உற்சவத் திருமேனிகள் தரிசிக்கத் தக்கவை.

Scroll to Top