You cannot copy content of this page

வீரட்டேசுவரர் கோவில், திருக்கோவிலூர்

வீரட்டேசுவரர் கோவில் திருக்கோவிலூர்

நடுநாட்டுத் தலம்

சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ. தொலைவு. திருவண்ணாமலையிலிருந்து பேருந்தில் சென்றால் தென்பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்து, ஊருள் சென்று, கடலூர் – பண்ருட்டிப் பாதையில் திரும்பிச் சென்றால், கீழையூர்ப் பகுதியில் கோயில் உள்ளது.

வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்க வேண்டும். இவ்வூர், மேலூர் கீழுர் என இருபிரிவானது. கீழுரில் (கீழையூரில்) இக்கோயில் உள்ளது. மேலூரில் வைணவ ஆலயம உள்ளது. இவ்வூர் மக்கள் வழக்கில், ‘திருக்கோயிலூர்’ என்று வழங்குகிறது.

அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அந்தகாசூரனை சம்ஹரித்த தலம். இத்தலம் வைணவப் பெருமையும் உடையது. இங்குள்ள திரிவிக்ரமப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் முதலிய ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்வியதேசம்.

‘ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்’ என்று சொல்லப்படும் முதலாழ்வார் மூவரின் வரலாற்று நிகழ்ச்சி இடம்பெற்ற தலம் இதுவே.

அறுபத்துமூவருள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதி இஃது.

சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி
மாதொருபாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்
வேத நன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்”
                                              (பெ. புரா. மெய். புரா)

இராசராசசோழன் பிறந்த ஊர். இவருடைய தமக்கை ‘குந்தவ்வை’ சுவாமிக்குப் ‘பொன் பூ’ வழங்கியதோடு சந்நிதியில் திருவிளக்குகள் ஏற்றிட ‘சாவா மூவா பேராடுகள் 300-ம், 2000 கழஞ்சு பொன்னும் ஊர்ச்சபையாரிடம் ஒப்படைத்த செய்தியைக் கல்வெட்டால் அறிகிறோம்.

கோயில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ளது.

கபிலர் பாரி மகளிரைத் திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து, அதன்பின்பு வடக்கிருந்து உயிர் விட்ட இடம், கோயிலின் பக்கத்தில் ஆற்றின் நடுவில் ‘கபிலர் குகை’ என்னும் பெயரில் உள்ளது. இது கோயிலமைப்பில் உள்ளது. உள்ளே சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தில் நின்று பார்த்தால் எதிரில் அறையணிநல்லூர் தலம் தெரிகிறது. இத்திருமணத்திற்குப் பந்தல் போட்ட இடம் ‘மணம்பூண்டி’ என்னும் பகுதியாக வழங்குகின்றது.இறைவன்-வீரட்டேஸ்வரர்இறைவி-சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகிதலமரம்-வில்வம்தீர்த்தம்-தென்பெண்ணை (தட்சிண பிணாகினி)

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

கோயில் மேற்கு நோக்கிய சந்நிதி. விசாலமான வெளியிடம் முன்புறத்தில் பதினாறுகால் மண்டபமொன்று சற்றுப் பழுதடைந்துள்ளது. முன்னால் வலப்பால் அம்பாள் கோயில் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் மிகவும் பழமையானது. மூன்று நிலைகளை யுடையது. உள்நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடப்பால் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலப்பால் ‘பெரியானைக் கணபதி’யின் சந்நிதி உள்ளது. ஒளவையார் வழிபட்டு, சுந்தரருக்கு முன கயிலையை அடைந்ததற்குத் துணையான – ஒளவையைத் தூக்கிவிட்ட – கணபதி இவரே என்பர்.

“கரிமீதும் பரிமீதும் சுந்தரருஞ் சேரருமே கைலை செல்லத்
 தரியாது உடன் செல்ல ஒளவையுமே பூசை புரி தரத்தை நோக்கிக்
 கரவாது துதிக்கையால் எடுத்து அவர்கள் செலுமுன்னும் கைலை விட்ட
 பெரியானைக் கணபதி தன்கழல் வணங்கிவிருப்பமெலாம் பெற்றுவாழ்வாம்.”

சோமாஸ்கந்தர் சந்நிதியை அடுத்து மகாவிஷ்ணு தரிசனம். எதிர்த்தூணில் பழநியாண்டவர் உள்ளார். வாயிலின் இடப்பால் வள்ளி தெய்வயானை ஆறுமுகப்பெருமான் மூர்த்தம் உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதி. நடராசசபை உள்ளது. மணிவாசகரும் சிவகாமியும் உடனுளர். திருமுறைப் பேழையுள்ளது. கபிலர் உருவச்சிலை உள்ளது.

தலமூர்த்தியாகிய அந்தகாசூர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

Scroll to Top