You cannot copy content of this page

ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்

ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்


தொண்டைநாட்டுத் தலம்

சென்னையின் ஒரு பகுதி. ‘உயர்நீதி மன்றப்’ பகுதியிலிருந்து
திருவொற்றியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. இப்பேருந்தில் ஏறி,
காலடிப்பேட்டையை அடுத்து, ‘தேரடி நிறுத்தத்தில்’ (தேரடி Stop)
இறங்கினால் எதிரில் வீதிகோடியில் கோயிலைக்காணலாம்.

ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். சுந்தரர், சங்கிலியாரை மணந்து
கொண்டசிறப்புடையது. கலியநாயனாரின் அவதாரத் தலம். தியாகேசப்
பெருமான் வீற்றிருந்தருளும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த தலம். ஐயடிகள்
காடவர்கோன், முசுகுந்தன் முதலியோர் வழிபட்டது.

முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்ற தலம். வடலூர்
வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி. மிகப்பெரிய கோயில்.
கோயிலின்முன் பதினாறுகால் மண்டபம் உள்ளது. பக்கத்தில் பெரிய
தீர்த்தக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது.

இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது.
பழமையான கோபுரம் உள்ளே நுழைந்தால் செப்புக்கவசமிட்ட கொடிமரம்,
பலிபீடம், நந்தி உள்ளன. வலமாகவரும்போது சூரியன் சந்நிதி, அப்பர்,
சம்பந்தர்,     மாணிக்கவாசகர், சுந்தரர்சங்கிலியாருடன், உயரமான
சஹஸ்ரலிங்கம், ஏகாம்பரர், இராமநாதர், ஜகந்நாதர், அமிர்தகண்டீஸ்வரர்,
யாகசாலை, குழந்தை ஈஸ்வரர், சுப்பிரமணியர், மதிற்சுவரை ஒட்டினாற்
போல இருபத்தேழு நட்சத்திரங்களும் இப்பெருமானை வழிபட்ட
ஐதீகத்தை விளக்கும் வகையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள
நட்சத்திர சிவலிங்கங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் காளி
சந்நிதியும் உள்ளது. இதற்கு வலப்பால் கௌரீஸ்வரர் சந்நிதி உள்ளது.
இச்சந்நிதியில் தட்சிணாமூர்த்தி யோகமுத்திரையுடன் காட்சி தருகின்றார்.
பக்கத்தில் ஆதிசங்கரர் உருவம் உள்ளது. அடுத்து வேப்பமர நிழலில்
பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது. அடுத்து ஆகாசலிங்கம்,
அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர்,
மீனாட்சி சுந்தரேசுவரர் முதலிய சந்நிதிகள் (சிவலிங்கத் திருமேனிகளுடன்)
உள்ளன.

அதையடுத்து ‘ஒற்றியூர் ஈஸ்வரர்’ கோயில் அழகான முன்
மண்டபத்துடன் உள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால
பூஜைகளும் நடைபெறுகின்றன. இம்முன்மண்டபத் தூண்கள் அற்புதமான
சிற்பங்களை யுடையவை. ஒரு தூணில் பட்டினத்து அடிகளும் அதற்கு
எதிர்த்தூணில் பர்த்ருஹரியாரும் உள்ளனர். இவற்றிற்கு இடையில்
மேலேயுள்ள தூணில் – விதானத்தில் சூரியன் தலைப்புறமும் சந்திரன்
காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில்
பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள (கல்சிற்பம்) அழகு
கண்டுணரத் தக்கது. அழகான துவார பாலகர்கள். இச்சந்நிதி ஸ்ரீ
ஆதிசங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. பைரவர்
தனிக்கோயிலில் உள்ளார்.

(நடராசப் பெருமானின் பின்புறத்தின் சுவரில் வெளிப் பிராகாரத்தில்
ஏகபாத மூர்த்தி உருவம் அழகாக உள்ளது. அடுத்துச் சுந்தரமூர்த்தியார்
மண்டபம் உள்ளது. இதில் சுந்தரர், சங்கிலியாருடன் திருக்கல்யாண
கோலத்தில் காட்சி தருகின்றார். இம் மண்டபத்தில் மக்கள் இன்றும்
வந்து திருமணங்களை நடத்திச் செல்கின்றனர்.

வலம் முடிந்து நேரே சென்று தியாகராஜ சபா மண்டபம் அடையலாம்.
தியாகராஜர் சந்நிதி இங்கு விசேஷமானது. தரிசித்துப் பின்பு நுழைவு
வாயிலில் சென்றால் நேரே எதிரில் நடராசர் காட்சி தருகின்றார்.
இடப்பால் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் உற்சவத் திருமேனி
சந்நிதி உள்ளது. அழகான முன்மண்டபம் கல்லால் ஆனது. வலப்பால்
குணாலய விநாயகர் சந்நிதி. நேரே மூலவர் சந்நிதி. எதிரில் நந்தி,
பலிபீடம். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது.இறைவன்-ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்இறைவி-திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.தலமரம்-மகிழ மரம்தீர்த்தம்-பிரம தீர்த்தம்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

மூலவர் சுயம்பு. நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி,
சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன.
சதுரவடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம்
அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை
மட்டுமே சார்த்தப்படுகின்றது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு
மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார். மீண்டும் சார்த்தப்பட்டு ஆண்டு
முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கிறார்.

பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்
நடைபெறுகிறது. விசாலமான உள்ளிடம் கொண்ட கருவறை,
ஒற்றியூருடைய ‘கோ’வின் தரிசனம் உள்ளத்திற்கு நிறைவைத் தருகிறது.
மூலவர் பிராகாரத்தில் கலிய நாயனார், அறுபத்துமூவர், தலவிநாயகர்
சந்நிதிகள் உள்ளன. அடுத்து ஆதிசங்கரர் சந்நிதி உள்ளது. பீடத்தில்
நான்கு சிஷ்யர்களின் உருவங்கள் உள்ளன. அடுத்து ஏகாதச ருத்ரலிங்கம்
உள்ளது. பக்கத்தில் முருகன் சந்நிதி. அடுத்துள்ளது மிக்க புகழ்பெற்ற
‘வட்டப்பாறை அம்மன்’ (காளி) சந்நிதி. இந்த அம்மன் ஒரு காலத்தில்
மிக உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும ஸ்ரீ
ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச்
சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

அடுத்து “திருப்தீஸ்வரர்” சந்நிதி உள்ளது. இங்குக் கல்லில் சிவலிங்க
வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. சந்திரசேகரர் சந்நிதி அடுத்து உள்ளது.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும்,மகாவிஷ்ணுவும்,
பிரமனும், துர்க்கையும் உள்ளனர். வள்ளற் பெருமானின் பாடல்களும்,
திருமுறைப் பதிகங்களும் கோயிற்சுவரில் கல்லில் பொறித்துப் பதிக்கப்
பெற்றுள்ளன.

அம்பாள் சந்நிதி. கோபுர வாயிலில் நுழைந்தவுடன் வலப்பால் உள்ளது.
தனிக்கோயில் – தெற்கு நோக்கியது. அம்பாளும் ஸ்ரீ ஆதிசங்கரர்
பிரதிஷ்டையாகும். இந்த அம்பாள் மீது வடலூர் வள்ளற் பெருமான்
பாடியதே ‘வடிவுடை மாணிக்கமாலை’யாகும். இப்பாடல்கள்
சலவைக்கல்லிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top