You cannot copy content of this page

ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்

தொண்டைநாட்டுத் தலம்

சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பல
நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி
உள்ளன.

செங்கற்பட்டு – அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம்
இருப்புப்பாதை நிலையம் – மத்தியில் உள்ளது.

காஞ்சிபுரம், வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும் சிறப்புடையது.
கி.மு.5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீன
யாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது.
கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள்
காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார்.

தொண்டை நாட்டின் தலைநகரமாகத் திகழும் காஞ்சிபுரம், கி.பி.
3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த
பல்லவர்களுக்குத் தலைநகராக விளங்கியது. சோழர்கள், விஜயநகர
மன்னர்கள் ஆகியோர்களின் ஆட்சி முத்திரைகளும் இந்நகரில்
பதிந்திருந்தன.

“கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்” என்று அப்பர் தேவாரத்தில்
புகழப்படும் இத்தலம் பண்டைக்காலத்தில் கல்விக்கு இருப்பிடமாக
விளங்கிக் ‘கடிகாஸ்தானத்தை’யும், புகழ்பெற்ற அறிஞர்களையும்
பெற்றிருந்தது. ஹர்ஷர் காலத்தில் புகழுடன் விளங்கிய நாலந்தாப்
பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும், பேராசிரியர்
தின்னாகரும், பௌத்த சமயத் தத்துவ நூல்களை எழுதி உதவிய
போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே.

அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய
பரிமேலழகர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், வண்ணக்
களஞ்சியம் நாகலிங்க முனிவர், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான
சியாமா சாஸ்திரிகள், இசைமேதை நயினாப் பிள்ளை முதலியவர்களைப்
பெற்ற பேறுடையதும் இத்தலமே. மணிமேகலை வந்து தங்கி உபதேசம்
பெற்ற தலம் காஞ்சியே. காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள ‘ஜின காஞ்சி’
(ஜைன காஞ்சி) என்னும் பகுதி-தற்போது திருப்பருத்திக்குன்றம் என்று
வழங்கும் பகுதி-பண்டை நாளில் சமணர்களுக்குக் (திகம்பரப்
பிரிவினர்க்கு) கோட்டையாக விளங்கியதாகும். இங்குள்ள ஜைனக்கோயில்
மிக்க சிறப்பு வாய்ந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மல்லிசேனா,
வாமனசூரி போன்ற சமணப் பெருமக்கள் காஞ்சியில் அனைவராலும்
மதிக்கத்தக்கவர்களாக வாழ்ந்தனர். இவையெல்லாம் நோக்குமிடத்துக்
காஞ்சிபுரம் சமயப் பொதுவிடமாகத் திகழ்ந்தது என்பதையும்
அறிகின்றோம்.

வைணவத்திலும் காஞ்சி அழியாத சிறப்பைப் பெற்றுள்ளது.
பொய்கையாழ்வாரும் வேதாந்த தேசிகரும் வாழ்ந்த பதி. ஸ்ரீ ராமாநுஜர்
இளமைக் காலத்தைக் காஞ்சியில் கழித்து அத்திகிரி அருளாளனாகிய
ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பேரருளைப் பெற்றார். திருமழிசையாழ்வாரும்
சில காலம் காஞ்சியில் வாழ்ந்தார் என்பதும், அவர் தொடர்பான
‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ வரலாறும் அனைவரும்
அறிந்ததே. வரதராஜப் பெருமாளுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த
‘திருக்கச்சி நம்பிகள்’ பெருமையை அறியாதார் யார்?

காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள்
மலிந்து விளங்கும் நகரமாதலின் ‘விழவறாக் காஞ்சி’ என்று புகழப்படும்
பெருமை பெற்றது.

பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம் முதலிய நூல்கள்
இத்தலத்தின் புகழைப் பாடுகின்றன.

தற்கால உலகில் பட்டுப்புடவைகளுக்குப் புகழ் பெற்றது காஞ்சி.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பஞ்சபூதத்
தலங்களுள் இது பிருதிவித் தலம்.

சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம் இதுவே.
காமாட்சியம்பிகையின் ஆலயம் காமக்கோட்டம் எனப்படும்.
இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு
அறங்களையும் செய்தருளிய அற்புதத் தலம். கந்தபுராணம் தோன்றிய
பெருமையுடைய தலமும் இதுவே. இந்நூலாசிரியரான கச்சியப்ப
சிவாசாரியார் தொண்டு செய்து வந்த குமரக்கோட்டமும் (முருகன்
திருக்கோயில்) இங்குள்ளதே. கந்த புராணம் அரங்கேற்றப்பட்ட மண்டபம்
இன்றும் இத் திருக்கோயிலில் கச்சியப்பர் பெயரில் நூலகமாகப்
பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

‘நகரேஷு காஞ்சி’ ‘முத்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சி’
என்றெல்லாம் புகழ்ந்தோதப்படும் இத்தலத்திற்கு 1. பிரளயசித்து
2. காமபீடம் 3. மும்மூர்த்திவாசம் 4. சிவபுரம் 5. விண்டுபுரம்
6. தபோமயம் 7. சகலசித்தி 8. கன்னிகாப்பு 9. துண்டீரபுரம்
10. சத்திய விரதக்ஷேத்திரம் 11. பூலோக கயிலாயம் 12. பிரமபுரம் என்பன
வேறு பெயர்கள். திருவேகம்பமும் குமரக்கோட்டமும் காமக் கோட்டமும்
சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது இத்தலத்திற்குள்ள தனிச்
சிறப்பாகும். தீர்த்தச் சிறப்பும் இதற்குண்டு. சர்வதீர்த்தத்தின் சிறப்பு
அறியாதார் யார்? ‘தரையிடங்கொளும் பதிகளிற் காஞ்சியந்தலம்’ சிறந்தது
என்பது கந்த புராணத் தொடராகும்.

சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன்
ஆகியோர் வாழ்ந்ததெய்வப் பதி.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் ஊன்று கோலைப்
பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த்
திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற
அற்புதம் நிகழ்ந்த தலமிதுவே. உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும்
முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம் கச்சபேசம், ஆகிய
கோயில்கள் உள்ள தலம்.

இத்தலபுராணமாகிய காஞ்சிப் புராணம் – மாதவச் சிவஞான
சுவாமிகளால் இயற்றப்பட்டது – தலபுராண வரலாற்றில் மிகச்
சிறப்புடையதொரு இடத்தைப் பெற்றுள்ளதாகும். சிவஞான சுவாமிகள்
காஞ்சியில் ஒரு பகுதியாக விளங்கும் பிள்ளையார் பாளையத்தில்
மண்டபத் தெருவிற்குப் பக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை
மடாலயத்தில் தங்கிக் காஞ்சிப் புராணத்தை எழுதினார். பிரமன் வழிபட்ட
தலமாகிய இக் காஞ்சி, நிலமகளின் உந்தித் தானம் போன்றது என்று
புகழப்படுகின்றது.

திசையனைத்தும் பக்தியுடன் போற்றிப் பணிந்து பரவப்படும் ஸ்ரீ
காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடம்
உள்ள தலம் இதுவே. அருளொழுகு தவவிழிகள் அமையப் பெற்று,
அண்டி வரும் அனைவருக்கும் அருள்சொரிந்து, உலகு வாழத் தவமாற்றி,
உயர்ந்தோங்கு தவந்தனில் ஒப்பில்லா மாட்சிமையுடையவர்களாகத்
திகழ்ந்து வரும் காஞ்சி மாமுனிவர்களின் அருளாட்சி நனிசிறக்கும்
அருமைத் தலமும் காஞ்சியே. சைவ ஆதீனங்களுள் மிகப் பழமையான
ஆதீனமாகவும் மெய்கண்டதேவர் சந்தான பீடமாகவும் பெருமையுடன்
திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் இத்தலத்தில்தான்
உள்ளது. இத்திருமடாலயத்தில், குருமகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ
ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் அவர்கள்
எழுந்தருளியிருந்து     (232-ஆவது பட்டம்) அருளாட்சி செய்து
வருகின்றார்கள்.

இத்தகு அளவற்றசிறப்புக்களையுடைய இத்தலத்தில் கயிலாயநாதர்
கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், கச்சபேசம் முதலிய எண்ணற்ற
கோயில்கள் இருப்பினும் பாடல்பெற்ற திருமுறைக் கோயில்கள்
எனப்படுபவை ஐந்தேயாகும். அவை 1. திருவேகம்பம் 2. திருமேற்றளி
3. ஓணகாந்தன்தளி 4. கச்சிநெறிக்காரைக்காடு 5. அநேகதங்காவதம்
என்பன.

இவற்றுள் ‘பெரிய கோயில்’ என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏகாம்பரநாதர்
திருக்கோயிலே ‘கச்சித் திருவேகம்பம்’ என்று போற்றப்படும் பெருமை
வாய்ந்தது.

Scroll to Top