You cannot copy content of this page

இராமலிங்கசுவாமி கோவில், இராமேசுவரம்

இராமலிங்கசுவாமி கோவில், இராமேசுவரம்


பாண்டிய நாட்டுத் தலம்.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச்
செல்லும் புண்ணியத் தலம்.

சென்னை – இராமேஸ்வரம் இருப்புப்பாதை உள்ளது. பேருந்தில்
வருவோர் முன்னர் மண்டபத்தில் நிறுத்திவிட்டு, புகைவண்டி மூலம்
பாம்பன் பாலம் கடந்து இத்தலத்தையடைய வேண்டும். தற்போது
கடலின் மேலே பாலம் கட்டப்பட்டு அது பூர்த்தியாகிவிட்டதால்
கோயில் வரை எல்லாவாகனங்களும் செல்ல மிகவும் வசதியாக
இருக்கிறது.

இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமன் சிவலிங்கப்
பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம். கயிலையிலிருந்து அநுமன்
கொண்டுவர, காலந்தாமதமாக, சீதை மணலால் அமைத்த லிங்கத்தை
இராமர் வழிபட்டார். இம்மூர்த்தியே இராமநாத சுவாமி ஆவார்.
காலந்தாழ்ந்து அநுமன் கொண்டு வந்த இலிங்கம் (விசுவலிங்கம்)
பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிறந்த, புண்ணிய
யாத்திரைத் தலம்.

தனுஷ்கோடி – சேது இத்தலத்தையடுத்துள்ளது. இங்கு வந்து
மூழ்கினால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பது மரபு.
பல்லாண்டுகளுக்கு முன்னால் வீசிய புயலால் தனுஷ்கோடி இடம்
அழிந்து போயிற்று. இப்போது அங்குச் செல்வோர் மிகக்குறைவு.
அங்குக் கடல் சங்கமம்தவிர வேறொன்றுமில்லை. இத்தலம் ஒரு தீவு.
பாம்பன் பாலம் அற்புதமான அமைப்புடையது. இப்பாலம் பாம்பனையும்,
மண்டபத்தையும் இணைக்கிறது.

இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் இக்கோயிலையே நம்பி
வாழ்கின்றனர். கடற்பகுதி ‘அக்கினி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது.
இக்கரையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய
சுவாமிகள் ஸ்ரீ மடத்தின் கிளை மடமும் ; சந்நிதி வீதியில்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் கிளை மடமும் உள்ளன. மற்ற
மடங்களில் கிளைகளும், ஏராளமான சத்திரங்களும் கோயிலைச்
சுற்றியுள்ளன.

இத்திருக்கோயிலின் நீண்டு அகன்ற பிராகாரங்கள் மிகச் சிறப்பு
வாய்ந்தவை. மூன்றாவது வெளிப்பிராகாரம் மிக நீளமானது என்னும்
சிறப்பினைப் பெற்றது. வெளிப்பிராகாரத்தில் 1200 தூண்கள் உள்ளன.
கலையழகு மிக்க இக்கோயிலின் சிறப்பு அளவிடற்கரியது.

இக்கோயிலின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமானவர்கள்
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களேயாவர். இம்மன்னர்கள் பலரும்
அவரவர்காலங்களில் திருப்பணிகளைச் செய்து இக்கோயிலைக் கட்டி
வளர்த்து வந்துள்ளனர்.இறைவன்-இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்இறைவி-பர்வத வர்த்தினி, மலைவளர்காதலிதலமரம்-பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.தீர்த்தம்-கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலிய இடங்களில்) உள்ளன.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

மிகப்பெரிய கோயில். உயர்ந்த கோபுரங்கள், மூல லிங்கத்தையும்
கருவறையையும் அம்பிகைக் கோயிலையும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்
இலங்கை மன்னர் ‘பராக்கிரமபாகு’ என்பவன் கட்டியதாகச் சான்றுகள்
இருப்பதாகத் தலவரலாறு கூறுகின்றது.

தேவஸ்தானம், யாத்ரிகர்களுக்கு மிகச் சிறப்பான வசதிகளைச்
செய்து தருகின்றது. பலவகைகளில் தங்கும் விடுதிகள் பலவுள்ளன.
இராமநாத சுவாமி சந்நிதியிலுள்ள இலிங்கம் சீதையால்
அமைக்கப்பட்டது. அநுமன் கொண்டு வந்த மூர்த்தம் விசுவலிங்கம்,
முதற் பூசை இச்சந்நிதியில்தான் தொடங்குகிறது. அம்பாள் சந்நிதியில்
உள்ள ஸ்ரீ சக்கரம் தரிசிக்கத்தக்கது. இக்கோயிலில் உள்ள சேது
மாதவர் சந்நிதி சிறப்பானது.

இக்கோயிலுக்கு வடக்கில் 2 கி.மீ. தொலைவில் ‘கந்த மாதன
பர்வதம்’ உள்ளது. இங்குள்ள இருபாத சுவடுகள் ‘இராமர் பாதம்’
எனப்படுகின்றன. இங்குள்ள தீர்த்தம் ஜடா தீர்த்தம் எனப்படும்.
கோதண்டராமர் கோயில் சேது (தனுஷ்கோடி) ஸ்நான கட்டத்திற்குச்
செல்லும் வழியில் – 5 கி.மீ. தொலைவில் உள்ளது. நாடொறும் ஆறு
கால பூசைகள் முறையாக நியமப்படி நடைபெறும். இத்திருக்கோயிலில்
எல்லாச் சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன. சிவராத்திரி
அபிஷேகங்கள், திருக்கல்யாண உற்சவம், தெப்போற்சவம், வாராந்திரத்
தங்கப் பல்லக்குப் புறப்பாடு (வெள்ளிக் கிழமைகளில்) வசந்தோற்சவம்
இராமலிங்கப் பிரதிஷ்டை விழா முதலியவை சிறப்புடையவை.

இத்தலபுராணம் நிரம்ப அழகிய தேசிகரால் (சேது புராணம்)
பாடப்பட்டுள்ளது. சொக்கநாதப் புலவர் ‘தேவையுலா’ பாடியுள்ளார்.

கிழக்குக் கோபுரம் பிரதான வாயில். பிரதான வாயில் முகப்பில்
உள்ள சேதுபதி மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் உடையது.
உட்புகும்போது ஆஞ்சநேயர் சந்நிதி உளது. உள்ளே சென்றால் பெரிய
சுதையாலான நந்தி தரிசிக்கத்தக்கது. இருபுறமும் மதுரை அரசர்களான
விசுவநாத நாய்க்கர், கிருஷ்ணப்ப நாய்க்கர் உருவங்கள் உள்ளன.
கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் கிணறுகள் வடிவில்
உள்ளன. நீரை முகந்து எடுத்தே நீராட வேண்டும். அக்கினி
தீர்த்தத்தில் (கடலில்) நீராடி, நேரே கோயிலுக்குள் வந்து முறையாக
வரிசையாக எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடுவர். கோயில்
பிராகாரங்களில் நீராடிச் சுற்றுவோர் கூட்டமும் தண்ணீர் ஈரமும்
எப்போதும் இருக்கும்.

மூலவர் சிவலிங்க மூர்த்தி. சிறிய திருமேனி. கங்கா ஜலம் மட்டுமே
அபிஷேகம் செய்யப்படுகிறது. பாண்டாக்கள் பூஜைகளைச்
செய்கின்றார்கள். அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது. நின்ற கோலம்
– அழகான திருமேனி – தனிக்கோயில்.

இத்திருக்கோயிலில் உள்ள பிற சந்நிதிகள் வருமாறு :-
1. விசுவநாதர், விசாலாட்சி
2. பள்ளிகொண்ட பெருமாள்
3. சந்தான கணபதி
4. மகாகணபதி
5. முருகர்
6. சேதுமாதவர்
7. சபாபதி (நடராசர்)
8. ஆஞ்சநேயர்
9. மகாலட்சமி
10. நந்திதேவர் முதலியன.

இங்குள்ள தீர்த்தங்களுள் உயர்வானது ‘கோடி’ தீர்த்தமாகும். இஃது
கிணறு வடிவில் உட்புறத்தில் அமைந்துள்ளது. நீராடுவோர் வெளியே
இருந்து தீர்த்தத்தை ஏற்றுக்கொள்ள கோமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

‘காசி – இராமேஸ்வரம்’ என்னும் பேச்சு வழக்கிலிருந்து
இத்தலத்தின் மேன்மையை அறியலாம். வாழ்நாளில் ஒவ்வொருவரும்
இவ்யாத்திரையைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு
செல்வோர் முதலில் இராமேஸ்வரம் வந்து கடல் நீராடி இராமநாதரைத்
தொழுது, இங்கிருந்து (கடல்) மண்ணையெடுத்துக் கொண்டு – காசி
சென்று, கங்கையிற்கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரைத் தொழுது
கங்கை நீருடன் திரும்பவும் இராமேஸ்வரம் வந்து இராமநாதசுவாமிக்கு
அபிஷேகம் செய்து வணங்கியே யாத்திரையைப் பூர்த்தி செய்ய
வேண்டும். இதுவே முறையானது. (கோயில் மிகப் பெரியதாதலின் பிற
விவரங்களையும் சந்நிதிகளையும் நேரில் தரிசிக்கும்போது கேட்டும்
கண்டும் பேறு பெறலாம்.)

Scroll to Top