You cannot copy content of this page

நெடுங்களநாதர் கோவில், திருநெடுங்களம்

நெடுங்களநாதர் கோவில், திருநெடுங்களம்


சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

  1. திருச்சி – தஞ்சை சாலையில் வந்து, துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி.மீ. சென்று நெடுங்களத்தையடையலாம்.
  2. திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து திருநெடுங்களத்திற்கு நகரப் பேருந்து உள்ளது.
  3. திருச்சி – மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. (மக்கள் கொச்சையாகப் பேசும்போது மட்டும் திருநட்டாங்குளம் என்கின்றனர். மற்றபடி நெடுங்களம் என்ற பெயரே வழக்கில் உள்ளது.)

திருவெறும்பூர் கோயிலுடன் இணைந்தது ; அச்செயல் அலுவலரே இதன் நிர்வாகத்தையும் பார்த்து வருகின்றார்.இறைவன்-நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.இறைவி-மங்களநாயகி, ஒப்பிலா நாயகிதலமரம்-வில்வம்தீர்த்தம்-அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம். சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து பலருக்கும் வழங்கினால் நோய் தீருமென்பது நம்பிக்கையாக இருந்து வருகின்றது.சம்பந்தர், பாடல் பெற்றது.

சிறிய ஊர், பழைய கோயில். அகத்தியர் வழிபட்டது.

ராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் ஆலயம் வெளிப்புறம் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தங்கள் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் முதலியன சிறப்பாகவுள்ளன. இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது. மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.

நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், சதுர்ப்புஜம். தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

மூலவர் – நிறைவான மூர்த்தி – ‘நினைவார்தம் இடர்களையும்’ நிமலனின் தரிசனம். மூலத்தானத்தின்மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையது – யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறதாம். நாடொறும் நான்கு கால பூஜைகள். மாதவிழாக் களுடன் நவராத்திரி, பிரதோஷ காலங்கள், தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலியவை சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் பெருவிழா.

அண்மையிலுள்ள தலம் திருவெறும்பியூர். கல்வெட்டில் இத் தலம் “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திரு நெடுங்களம்” என்றும் ;இறைவன் பெயர் ‘நெடுங்களத்து மகாதேவர்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 30-6-1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் 30க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

“நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என் அடியான் உயிரை வௌவேல் என்றுஅடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.”                  (சம்பந்தர்)

“தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் – கட்டி
எடுங்கள் அத்தா என்னாமுன் ஏழை மடநெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.”
             (ஐயடிகள் காடவர்கோன்)

                 -துன்றுகயற்
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே.
                 (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. நித்தியசுந்தரேஸ்வரர்,
நெடுங்களநாதர் திருக்கோயில்
திருநெடுங்களம் & அஞ்சல் – 620 015.
திருச்சி வட்டம் – மாவட்டம்.

Scroll to Top