You cannot copy content of this page

சிவன்கோவில், திருவெண்காடு

சிவன்கோவில், திருவெண்காடு

சோழநாட்டு (வடகரை)த் தலம்.

சுவேதாரண்யம், சுவேதவனம் என்றும் பெயருடைய தலம்.

மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதியுள்ளது. மயிலாடுதுறை – மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது.இந்திரன் வெள்ளையானை வழிபட்ட தலம். அச்சுதகளப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர் உள்ள பதி.

பெரிய கோயில். சுற்று மதில்களுடன் நன்குள்ளது. நன்குபராமரிக்கப் பட்டு வருகின்றது. மூன்று மூர்த்திகள், மூன்று தலமரங்கள், மூன்று அம்பிகைகள், மூன்று தீர்த்தங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ள தலம். (சுவேதாரண்யர், அகோரர், நடராசர் – வட ஆலமரம், கொன்றை, வில்வம் – பிரம்மவித்யாநாயகி – துர்க்கை காளி – சூரிய சந்திர, அக்கினி தீர்த்தங்கள்.)

இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டுமுக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த செயல் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.

‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையாவரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.”

இதுதவிர பின்வரும் பழைய தாலாட்டுப் பாட்டும் இக்குளச் சிறப்பை விளக்கும் :-

“சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து
முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ.”
ஊர்சிறியது-கோயில் பெரியது.இறைவன்-சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.இறைவி-பிரமவித்யாநாயகி.தலமரம்-வடஆலமரம்.தீர்த்தம்-முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்).
இம்மூன்று திருக்குளங்களும் வெளிப்பிராகாரத்தில்
உள்ளன. முதலில் அக்கினி தீர்த்தம், பிறகு சூரிய
தீர்த்தம் இறுதியாக சந்திர தீர்த்தம் என்ற
வரிசையில் நீராடுவர்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்கினி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரிய தீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. முகப்பில் ‘புதன்’ சந்நிதியும் எதிரில் அடுத்த தான ‘சந்திர’ தீர்த்தமும் உள்ளது. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை வலம் வந்து வழிபட்ட பின்னரே இங்குத் தரிசனம் பூர்த்தியாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முன் இல்லாத வில்வ மரம் உள்ளது.

இதன் பக்கத்தில் பிரமபீடம் உள்ளது. வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்குப் பிரமவித்யாம்பிகை என்று பெயர்வந்தது.

அம்பாள் சந்நிதிக்குள் வலப்பால் பள்ளியறை. நேரே அம்பாள் தரிசனம். உள்பிராகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்பாள் என்ற பெயரில் நின்ற திருமேனியொன்றும் சுக்கிரவார அம்மன் சந்நிதியும் உள்ளன.

சந்திரதீர்த்தத்தின் கரையில் வடால (வட ஆல) மரமுள்ளது. மிகப் பெரிய மரமாகத் தழைத்து விளங்குகிறது. ஆங்காங்கே விழுதுகள்ஊன்றி அவை அவை தனித்தனி மரமாகக் கிளைத்து விசாலமாகத் தழைத்துள்ளது. மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வெளிவலம் முடித்து, கொடிமரம் தொழுது உட்சென்றால் வலப்பால் உற்சவ மண்டபம் உள்ளது. பக்கத்தில் அலுவலகம். வாயில் முகப்பில்

மேலே வண்ணச் சுதையில் திருக்கல்யாணக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் தரிசனம். அறுபத்துமூவர் மூல உற்சவத் திருமேனிகள் இருவரிசைகளில் முன் பின்னாக அழகுறக் காட்சி தருகின்றன. (மூலத் திருமேனிகள் பின் வரிசையாகவும் உற்சவத் திருமேனிகள் முன் வரிசையாகவும் இரு வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.) அடுத்துப் பத்திரகாளி சந்நிதி உள்ளது. (அகோரமூர்த்தி உள்ள தலமாதலின் இங்குப் பத்திரகாளி சந்நிதி உள்ளது.)

அதை அடுத்து வீரபத்திரர், இடும்பன், சுகாசனமூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் முதலிய திருமேனிகள் ஒரு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கஜலட்சுமி தரிசனத்தையடுத்து இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக- உண்மையிலேயே அகோரராக – அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். கண்களுக்குப் பெருவிருந்தாகக் காட்சிதரும் அகோரமூர்த்தியை விட்டுப் பிரிந்து வரவே மனமில்லை. சலந்தரன்மகன் மருத்துவன். இவன் இறைவனை நோக்கித்தவம் செய்தான். இறைவன் காட்சிதந்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்களைத் தவம் செய்யவொட்டாத வாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார். போர் தொடுக்கையில் மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதையறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரம். (மாசி மகத்து மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசிக்க வேண்டும். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

Scroll to Top