You cannot copy content of this page

பூஜைக்கேற்ற பூவிது

பூஜைக்கேற்ற பூவிது

சிவபெருமானுக்கு உன்மத்த சேகரன் என்று ஒரு பெயர் இருக்கிறது. உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. ஊமத்தம் பூ மீது விருப்பம் கொண்டவன் என்று பொருள். எருக்கு தும்பை ஆகிய பூக்களும் அவருக்குப் பிடிக்கும்.

அப்பைய தீட்சிதர் என்ற மகான் பைத்தியம் பிடித்த நிலையிலும் சிவன் மீது 50 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திரத்தை பாடினார். அதற்கு உன்மத்த பஞ்சாசத் என்று பெயர் அதில் சிவபெருமானே உன் கருணையை என்னவென்று சொல்வேன் எளிதாக கிடைப்பதும் மக்களால் பயன்படுத்தாததுமான ஊமத்தை தும்பை எருக்கு ஆகிய மலர்களை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு மோட்சத்தை வழங்குகிறாயே என போற்றியுள்ளார்.

விலையே இல்லாத இந்த மலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளுக்கு எளிமையே பிடிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது

விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளை அட்சதையால் பூஜிப்பதும் தவறுதான். சிவனுக்கு தாழம்பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை மலர் விலக்கானது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உரியவை அல்ல.

தும்பை, வில்வம், கொன்றை, ஊமத்தை, வெள்ளெருக்கு போன்றவை சிவனுக்கு உரிய மலர்கள். காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளிப் பூக்கள் உகந்தவை. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என ஆன்றோர்களால் கூறப்படுகிறது.

சாமந்திப்பூ உள்ளிட்ட மணமில்லாத மலர்களை பூஜைக்கு விலக்கி விடவேண்டும். ஆனால் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும்போது முழு மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கிள்ளி அர்ச்சனை செய்வது வேண்டாம். காய்ந்து போன, வாடிப்போன, பூச்சிகள் கடித்த, அழுகிப்போன பூக்களை வழிபாட்டில் சேர்ப்பது தெய்வ குற்றம்.

பொதுவா பூஜைக்கு புஷ்பங்களை கடையில வாங்கி வருவதே மத்திமம்தான். நம்முடைய வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்கள்தான் பூஜைக்கு மிகவும் சிறந்தது. அழுகிய, பழைய புஷ்பங்களை சுவாமிக்கு சார்த்த கூடாது. அன்னன்னிக்கு பூத்த பூக்களை சுவாமிக்கு அர்ப்பணிக்கணும்.

சிவனுக்கு தாழம்பூவும் அம்பாளுக்கு அருகம்புல்லும் விநாயகருக்கு துளசியும் சூரியனுக்கு வில்வமும் விஷ்ணுவிற்கு எருக்கம் பூ ஊமத்தையும் உதவாது.

முருகருக்கு செவ்வரளிப் பூ மிகவும் விசேஷம். சிவனுக்கு வில்வம் கொன்றை பூ விசேஷம். பாரிஜாத பூ விஷ்ணுவிற்கு விசேஷம். அம்பாளுக்கு மல்லிகைப்பூ செம்பருத்தி போன்றவை விசேஷமானது.

வில்வபத்திரத்தை பூஜித்தபின் கழுவி மீண்டும் அர்ச்சிக்கலாம் இதே மாதிரி ஐந்துநாட்கள்வரை வில்வம் அர்ச்சிக்கலாம். சுவர்ண புஷ்பம் எனப்படும் தங்க அரளியை மூன்று நாட்களும் துளசியை பத்து நாளும் மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம். இவைகளுக்கு பழசு என்ற தோஷம் இல்லை.

எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை,பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டு பூக்களும் அஷ்ட புஷ்பங்கள் என்று வழங்கப்படும்.

புஷ்பங்களை கிள்ளி கிள்ளியோ இதழ் இதழாக பிய்த்தோ பூஜை செய்யக் கூடாது.

குளித்து முடித்து ஈர ஆடை களைந்து புதிய உலர்ந்த ஆடை அணிந்து புஷ்பங்களை பறிக்க வேண்டும். குளிக்காமல் பூ பறிக்க கூடாது. பூக்களை நமது ஆடையில் பறிக்க கூடாது. அதற்கென உள்ள பூக்குடலையில் பறிக்க வேண்டும். கீழே விழுந்த புஷ்பம், வாடிய புஷ்பம், புழு அரித்தது, முகர்ந்து பார்த்தது, முடியுடன் சேர்ந்த புஷ்பம் ஆகியவை பூஜைக்கு உதவாது.

திங்கள் கிழமையில் வில்வம் பறிக்க கூடாது. பிரதோஷ வேளையிலும் பறிக்க கூடாது. வில்வங்களை தளம் தளமாக அர்ச்சிக்க வேண்டும் துளசியையும் இவ்வாறே தளம்தளமாக அர்ச்சித்தல் வேண்டும். பல நாமாக்களை சொல்லி ஒரு பூவினால் அர்ச்சிக்கலாம் தவறு இல்லை. தாமரைப்பூவில் சரஸ்வதியும் அரளிப்பூவில் பிரம்மாவும் வன்னிபத்திரத்தில் அக்னியும் வில்வத்தில் சிவனும் இருப்பதாக ஐதீகம்.

வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகமானவை! சிவந்த புஷ்பங்கள் ரஜச குணம் கொண்டவை கருநிற புஷ்பங்கள் தாமச குணம் கொண்டவை, மஞ்சள் நிறமுள்ளவை மிச்ரம் குணம் உள்ளவை.

வில்வபத்திரத்தில் சத்வம்,ரஜஸ் தாமஸ் என்ற முக்குணம் உள்ளது. இந்த ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகி சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாதிருக்க கூடாது.

விநாயகருக்கு வெள்ளெருக்கு,அருகு, வன்னி போன்ற பத்திரங்கள் புஷ்பங்கள் உகந்தவை! தூய்மையாக தும்பை பூ செலுத்தியும் வழிபடலாம்.

Scroll to Top