You cannot copy content of this page

குளியல் ரகசியம்

குளியல் ரகசியம்

*எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்!

*ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழிநடத்திக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது.

இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது.

*மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

*இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்! இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

*இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்! குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம். நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப் படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது! உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்!

*இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

*கோயிலுக்கு போய்ட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான்!

மனம் , உடல் மற்றும் ஆத்மா ஆகிய மூன்றையும் சமநிலைப் படுத்தும் சிகிச்சை – குளியல் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆற்றுப்படுத்தும் குளியல் உடலின் ஆற்றலை அதிகப் படுத்தி, மனத்தெளிவை மேம்படுத்தி, சுற்றுச் சூழல் நச்சுக்களைத் தோலிலிருந்து அகற்றி, மனதை இளைப்பாற்றி உணர்ச்சிகளை சமநிலைப் படுத்துகிறது.

எனவே காலை நேரக் குளியல் ஆயுர்வேத நடைமுறையில் ஒரு முக்கிய பகுதியாகும். ஒரு நிதானமான குளியல், பதட்டமான தசைகளை இளைப்பாற்றுகிறது ; அடைத்துவிட்ட துளைகளைத் திறக்கிறது, திசுக்களுக்கு ஈரப்பதத்தை மீண்டும் தருகிறது, உங்கள் நாளுக்கு ஒரு சிகிச்சைமுறை பரிமாணத்தை சேர்க்கிறது.

வரலாறு:

இந்தியாவில் மட்டுமல்ல, பல உலக கலாச்சாரங்களும் குளியலை குணப்படுத்தும் நடவடிக்கையாக கருதுகின்றன. பண்டைய கிரேக்கத்தில், கடவுளர்களிடமிருந்து பெறப் பட்ட பரிசாக நீர் கருதப் படுகிறது.

குளியலின் நன்மைகள்

உணர்ச்சிகளை, மனதில் மற்றும் நரம்பு மண்டலத்தை சமப் படுத்துகிறது.

இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
மனதை மென்மையாக்கி அமைதிப் படுத்தி ஆற்றல் நிலையை உயர்த்துகிறது.

பசியைத் தூண்டும் ஜாடராக்கினியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல் பாட்டை மேம்படுத்துகிறது.

சோர்வு, தூக்கம், களைப்பு எரியும் உணர்வு, தாகம், அரிப்பு மற்றும் வியர்வை ஆகியவற்றை நீக்கும்.

குளிர் நீரில் குளியல்

ஒரு குளிர்நீர் குளியல் எடுத்துக்கொள்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அது உங்கள் பிராணாவை அதிகரிக்கிறது. உங்கள் கண்பார்வை மேம்பட உதவுகிறது; மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் செரிமான செயல்பாடு மேம்பட உதவுகிறது ஆயுர்வேதத்தில் மூன்று வகையான பிரகிருதி (தன்மை) – வாதம் , கபம் மற்றும் பித்தம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக குளிர்காலத்தில், குளிர்ந்த நீரில் குளிப்பது, கபம் மற்றும் வாதம் சமநிலையின்மை ஏற்பட வழி வகுக்கலாம்.

வாத தன்மை கொண்டவர்கள் சீரான நடைமுறைகளை வெறுக்கின்றனர். புதிய விஷயங்களைச் செய்ய முற்படுவர். கப பிரகிருதி மக்கள் வழக்கமான நடைமுறைகளையே விரும்புவர்; ஆனால் பெரும்பாலும் அவை ஆரோக்கியமற்றதாகவே இருக்கும். இதற்கிடையில், பித்தப் பிரகிருதி வகையைச் சேர்ந்தவர்களால் பழக்க வழக்கங்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும், ஆனால் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களுக்கு இடையில் வித்தியாசத்தை கண்டறிய மிகவும் சிரமப் படுவர்.

சூடான நீர் குளியல்:

வாத வகையினருக்கு வெதுவெதுப்பான நீர் குளியல் நல்லது. அது வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், கோடை காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கக் கூடாது. அது பித்தத்தை அதிகரித்து விடும். மேலும், தலையில் சூடான நீரை பயன்படுத்துவது கண்கள், முடி மற்றும் இதயத்திற்கு நல்லது அல்ல. தலையில் சூடான நீரை விடுவது உணர்வு புலன்களின் ஆற்றலைக் குறைத்து விடும்.

வீட்டில் தயாரிக்கும் ஸ்நானப் பவுடர்:

இதற்கிடையில், ஆயுர்வேத பல்வேறு வகையான உடல் சுத்தப் பொடிகளை பற்றிக் கூறுகிறது. வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது பயன் படுத்தப்படலாம். இந்த பயன்பாடு இயற்கை அழகு மற்றும் பிரகாசத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. சூடான நீரில் குளிக்கும் போது, ​​ 2 டீஸ்பூன் கடலைமாவுப் பொடி, 1 தேக்கரண்டி சந்தனப் பவுடர், ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை கற்பூரம் ஆகியவற்றை கலந்து அப்பொடியைப் பயன்படுத்தலாம். குளிர் நீரில் குளியல் எடுத்துக் கொண்டால், கற்பூர தூள், நீர், பால் அல்லது ரோஜா நீர் கலந்து அந்தப் பசையை உடல் முழுவதும் தடவித் தேய்த்துக் குளியுங்கள்.

வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு

நீங்கள் வீட்டில் ஷாம்பு செய்யலாம். 100 கிராம் அரிதா பவுடர், 10 கிராம் வேப்பம் பவுடர், 20 கிராம் அம்லா பவுடர் மற்றும் 10 கிராம் மெதி பொடிஆகியவற்றை நீரில் கலந்து ஒரு தளர்வான பசையை செய்து, கொள்ளுங்கள் அதை ஷாம்பூவாகப் பயன் படுத்தலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

குளியலின்போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை ஆயுர்வேதம் பட்டியலிடுகிறது. சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரத்திற்கு குளிக்கக்கூடாது. செரிமானத்திற்குத் தேவைப்படும் வெப்பநிலையைக் குளியல் தடுத்து விடும். கடுமை யான வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாந்தி, நாள்பட்ட ஜலதோஷம்,சைனடிஸ், மூச்சுக் குழாய் அழற்சி, காது, கண் அல்லது தொண்டை தொற்று மற்றும் கடுமையான குடல் தொந்தரவுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது நீங்கள் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா ?

நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே. நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க:
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்.

புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

வியாழனால் ஏற்படும் தோஷம் நீங்க:
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

சுக்கிரன் :
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.

சனி :
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.

ராகு :
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.

கேது :
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.

Scroll to Top