You cannot copy content of this page

011 அக்கினி காரியம்

அக்கினி காரியம்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையும் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.  1

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே.  2

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.  3

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  4

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு மைநின்று அவிழ்தரு மந்திரமும் என்றும் செய்நின்ற செல்வமும் தீயது வாமே.  5

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு ஊழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.  6

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந் தெண்ணி அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.  7

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத் தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.  8

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே.  9

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து தங்கி இருக்கும் வகையருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே.  10

Scroll to Top