You cannot copy content of this page

013 அன்புடைமை

அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.  1

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.  2

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணாதே.  3

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே.  4

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.  5

தானொரு காலம் சயம்பு என் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.  6

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார் வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில் அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.  7

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.  8

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று நச்சியே அண்ணலை நாடுகி லாரே.  9

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான் முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.  10

Scroll to Top