You cannot copy content of this page

002 கடவுள் வாழ்த்து

பாயிரம்

கடவுள் வாழ்த்து

1 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

2 போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

3 ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள் தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே.

4 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

5 அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.

6 முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

7 தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

8 பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப் படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப் படுவார் இல்லை தானே.

9 அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே.

10 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.

11 கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலிதேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறிய கிலார்களே.

12 மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.

13 கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.

14 ஆதியும் ஆய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியும் ஆய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியும் ஆய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியும் ஆய் நித்தம் ஆகி நின்றானே.

15 கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே.

16 காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.

17 அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவ நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே.

18 இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூது அறிவாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி ஆக அமருகின்றானே.

19 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.

20 மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

21 வானப் பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே.

22 மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே.

23 வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் எயன நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளு கின்றானே.

24 போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் தன்னடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.

25 பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே.

26 தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.

27 சந்தி எனத் தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப் படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.

28 இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமரா பதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே.

29 காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.

30 வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன் நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.

31 மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.

32 தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.

33 பதி பல ஆயது பண்டு இவ் உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.

34 சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந் நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே.

35 ஆற்று கிலா வழியாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேல்திசைக்கும் கிழக்குத் திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.

36 அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப் பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப் பரிசு ஈசன் அருள் பெறலாமே.

37 நானும் நின்று ஏத்துவன் நாள் தொறும் நந்தியைத்
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதிபோல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே.

38 பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் யானே.

39 வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.

40 குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம் பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ் சடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே.

41 சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.

42 போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும்தானே.

43 அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.

44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.

45 விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

46 அந்தி வண்ணா அரனே சிவனே என்று
சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே.

47 மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே.

48 அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.

49 பரை பசு பாசத்து நாதனை உள்ளி
பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரை பசு பாவச் செழும் கடல் நீந்திக்
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே.

50 சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே.

Scroll to Top