You cannot copy content of this page

008 ஆதாரவாதேயம்

ஆதாரவாதேயம்

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு நாலிதழானவை நாற்பத்து நாலுள பாலிதழானவள் பங்கய மூலமாய்த் தானிதழாகித் தரித்திருந்தாளே. 1

தரித்திருந்தாளவள் தண்ணொளி நோக்கி விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக் குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.  2

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனு மானது சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.  3

வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க் கள்ளடை யாரக் கமழ்குழ லார்மன மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற பெண்ணொரு பாகம் பிறவி பெண்ணாமே.  4

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணுடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்றவாறே.  5

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங் காச்சற்ற சோதி கடவு ளுடன் புணர்ந் தாச்சற்று எனுட்புகுந் தாலிக்குந் தானே.  6

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி பாலித் துலகிற் பரந்து பெண்ணாகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஆலித் தொருவன் உகந்துநின் றானே.  7

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ டுகந்துனின் றான்நம் முழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம் உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.  8

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்துச் சொல்லகிலேனே. 9

சொல்லவொண்ணாத அழற்பொதி மண்டலஞ் செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள் வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி மல்லவொண் ணாத மனோன்மனி தானே.  10

தானே இருநிலந் தாங்கி விண் ணாய்நிற்குந் தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களுந் தானே மழைபொழி தையலு மாய்நிற்குந் தானே வடவரைத் தண்கடற் கண்ணே.  11

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர் மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப் பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர் விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.  12

கண்டெண் டிசையுங் கலந்து வருங்கன்னி பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும் விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு தொண்டெண் டிசையுந் தொழநின்ற கன்னியே.  13

கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன் மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறஞ் சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன் பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.  14

பராசத்தி என்றென்று பல்வகை யாலுந் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசாத்தி யாமள வாகமத் தாளுங் குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.  15

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி உணர்ந்துயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகமதாதி இணைந்து பரமென் றிசைந்திது தானே.  16

இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள் பொதுவக் கல்வியும் போகமுமாகி மதுவக் குழலி மனோன்மனி மங்கை அதுவக் கல்வியுள் ஆயுழி யோகமே. 17

யோகனற் சத்தி ஒளிபீடந் தானாகும் யோகனற் சத்தி ஒளிமுகந் தெற்காகும் யோகனற் சத்தி உதர நடுவாகும் யோகனற் சத்திதாள் உத்தரந் தேரே.  18

தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற வார்ந்தெழு மாயையும் அந்தமதாய் நிற்கும் ஒர்ந்தெழு விந்துவும் நாதமும் ஒங்கிடக் கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.  19

தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசை தானான வாறுமீ ரேழுஞ் சமகலை தானான விந்து சகமே பரமெனுந் தானாம் பரவாதனை எனத் தக்கதே.  20

தக்க பராவித்தை தானிரு பானேழிற் றக்கெழு மொருத் திரஞ்சொல்லச் சொல்லவே மயக்கிடும் எண் சத்தி வெண்ணிற முக்கண்ணி தொக்க கதையோடு தொன்முத்திரையாளே.  21

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள் தத்துவ மாயல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.  22

கொங்கின்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி பொங்கிய குங்குமத் தொளிபொ ருந்தினள் அங்குச பாச மெனுமகி லங்கனி தங்கு மவள்மனை தானறி வாயே.  23

வாயு மனமுங் கடந்த மனோன்மனி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளுநல் தாரமு மாமே.  24

தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகுங் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே.  25

பத்து முகமுடையாள்நம் பராசக்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.  26

கூறிய கன்னி குலாய பருவத்தள் சீரிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள் ஆரிய நங்கை யமுத பயோதரி பேருயி ராளி பிறிவறுத்தாளே.  27

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை குறியொன்றி நின்றிடுங் கோமளக்கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்ற நின்றனள் ஆருயிருள்ளே.  28

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங் கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வல்லற் றலைவி மருட்டிப் புரிந்தே.  29

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத் திருந்த விலக்கில் இனிதிருந்தாளே.  30

இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித் திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி நிரந்தர மாகிய நீர்திசை யோடு பொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே.  31

அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.  32

மூன்றுள மண்டல மோகினி சேர்விடம் ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில் தோன்று மிலக்குற லாகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.  33

இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல் வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில் உந்திய சோதி இதயத் தெழும்ஒலி இந்துவின் மேலுற்ற ஈறது தானே.  34

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிர மாறுதல் இன்றி மனோவச மாயெழில் தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது பெறது செய்து பிறந்திருந் தாளே.  35

இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத் திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.  36

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின் றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கைநல் லாளுங் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.  37

சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனி னுள்ளே கருதுவ ராகில் தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.  38

பாலித் திருக்கும் பனிமல ராறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திர மூலத்து மேலது முத்ததுவாமே.  39

முத்து வதனத்தி முகத்தொறு முக்கண்ணி சத்தி சதுரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி எண்ணுள்ள மேவிநின் றாளே.  40

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழெரி தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர் மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பார் ஓவினு மேலிடும் உள்ளொளி யாமே.  41

உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள் வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடுங் கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்குங் கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.  42

கொடிய திரேகை குருவுள் இருப்பப் படியது வாருனைப் பைங்கழ லீசன் வடிவது வானந்தம் வந்து முறையே இதுமுதல் ஆறங்கம் ஏந்திழையாளே.  43

ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும் காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டு மாந்த குளத்தியு மந்திர ராயமுஞ் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.  44

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்ப தறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள் கத்திய நாய்போற் கதறுகின்றாரே.  45

ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரேநின் றோதி நினையவும்வல் லார்க்குக் காரேர் குழலி கமல மலரன்ன சீறேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.  46

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத் தம்மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச் சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.  47

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச் சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை நவாதியி லாக நயந்தது ஓதில் உவாதி அவளுக் குறைவில தாமே.  48

உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும் இறைதினைப்1 போதினில் எய்திட லாமே. 49

எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.  50

கருத்துறுங் காலங் கருது மனமுந் திருத்தி யிருந்தவை சேரு நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே.  51

ஆமையொன் றேறி அகம்படி யானென ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும் தாம நறுங்குழல் தையலைக் கண்டபின் சோம நறுமலர் சூடிநின் றாளே.  52

சூடிடும் அங்குச பாசத் துளைவழி1 கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை நாடும் இருபத நன்னெடு ருத்திரம் ஆடிடும் சீர்புனை ஆடகமாமே. 53

ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன் தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங் காமனுஞ் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே.  54

சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடி நடுவிடை ஞாள முருவநின் றாடு மதன்வழி அண்ட முதல்வியே.  55

அண்ட முதலாய் அவனி பரியந்தங் கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது கண்டனுங் கண்டியு மாகிய காரணங் குண்டிகை கோளிகை கண்டத னாலே.  56

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ் சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங் கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ டேலவந் தீண்டி இருந்தனள் மேலே.  57

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்திடை நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன் மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.  58

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள் ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள் நாம நமசிவ யவ்வென்றிருப் பார்க்கு நேமத் துணைவி நிலாவிநின் றாளே.  59

நிலாமய மாகிய நீள்படி கத்தி சிலாமய மாகுஞ் செழுந்த ரளத்தி சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே.  60

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங் கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங் கலந்துநின் றாள் கன்னி காலமு மாயே.  61

காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங் கூலவி ஒன்றாகுங் கூட இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம தாமே.  62

பாகம் பராசக்தி பைம்பொன் சடைமுடி ஏகம் இருதயம் ஈரைந்து திண்புய மோக முகமைந்து முக்கண் முகந்தொறும் நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.  63

நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின் றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துளஅவை வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின் றாதியும் அந்தமு மாகிநின் றாளே.  64

ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள் ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள் ஆகிநின் றாளுட னாகிய சக்கரத் தாகிநின் றானவன் ஆயிழை பாடே.  65

ஆயிழை யாளொடு மாதிப் பரனிடம் ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுள ஆய மனத்தொ றறுமுக மவைதனில் ஏயவார் குழலி இனிதுநின் றாளே.  66

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட இன்றெ னகம்படி ஏழும் உயிர்ப்பெய்துந் துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள் ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.  67

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங் கொணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக் கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.  68

ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும் மாமது மண்டல மாருத மாதியும் ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக் கோமலர்க்கோதையுங் கோதண்ட மாகுமே.  69

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடப் பரையவள் ஆகு மவள்ஐங் கருமத்தள் தானே.  70

தானிதழ் மோகினி சார்வான யோகினி போன மயமுடை யாரடி போற்றுவர் ஆனவ ராவியி னாகிய வச்சிவந் தானாம் பரசிவ மேலது தானே.  71

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொற் றிருவொடு மோனையில் வைத்து மொழிதரு கூறது வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.  72

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி யார்க்கும் அறிய வரியா ளவளாகும் வாக்கு மனமும் மருவியொன் றாய்விட்ட நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.  73

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப் பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ் செந்நெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாவது சன்மார்க்கமாமே.  74

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந் துன்மார்க்க மானவை எல்லாந் துரந்திடும் நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதுஞ் சன்மார்க்கத் தேவியுஞ் சத்தியென் பாளே.  75

சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதலறி வாரில்லை அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கான் மத்தியி லேற வழியது வாமே.  76

அதுவிது வென்றவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே.  77

வென்றிட லாகும் விதிவழி தன்னையும் வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே.  78

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரமிது மாரங் குழலாளும் அப்பதி தானுமுன் சாரும் பதமிது சத்திய மாமே.  79

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில் வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ் சித்தது மேவித் திருந்திடுவாரே.  80

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த அருந்திட அவ்விடம் ஆரமுதாக இருந்தனள் தானங் கிளம்பிறை என்றே.  81

என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் தன்றது வாகுவர் தார்குழ லாளொடு மன்றது கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே.  82

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.  83

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடு மாங்கவள் எய்திய பல்கலை மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர் சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.  84

ஆயும் அறிவும் கடந்தணு வாரணி மாயம தாகி மதோமதி யாயிடும் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம தாநெறி யாகிநின் றாளே.  85

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங் குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.  86

ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமய னாளுந் தெனாதென என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே.  87

வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களும் கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும் வந்தனை செய்யும் வழி நவில் வீரே1. பா-ம் : 1 நவிலீரே  88

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங் கவற்றிய கந்தங் கவர்ந்தெறி தீபம் பயிற்றும் உலகினிற் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.  89

தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.  90

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவார் அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கண் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே.  91

விளங்கொளி யாய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக் களங்கொள் மணியுடன் காம வினோதம் உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே.  92

தொடங்கி உலகினிற் சோதி மணாளன் அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்கி யுமையொடும் ஓருரு வாமே.  93

உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற் புரிவளைக் கைச்சியெம் 1பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே. 94

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்குஞ் சலதி அமலனைக் காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.  95

உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை அணைந்தொழின் தேனெங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே.  96

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி நற்றாள் இறைவனே நற்பயனே என்பர் கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.  97

தனிநா யகன்றனோ டென்னெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் எழுல கென்பர் பணியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.  98

அம்மனை அம்மை அரிவை மனோன்மனி செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும் இம்மனை செய்த இந்நில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே. 99

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை அம்மையோ டத்தனும் யானும் உடனிருந் தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.  100

Scroll to Top