You cannot copy content of this page

005 அசுத்த சைவம் சரியை

அசுத்த சைவம் சரியை

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.  1

உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.  2

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.  3

பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த வியமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.  4

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.  5

கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபந் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே.  6

சரியாதி நான்குந் தருஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்த மாறும் பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.  7

சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே.  8

Scroll to Top