You cannot copy content of this page

006 கிரியை

கிரியை

பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.  1

கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.  2

கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழு மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.  3

இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம் அதுபணி செய்கின் றவள் ஒரு கூறன் இதுபணி மானுடர் செய்பணி யீசன் பதிபணி செய்வது பத்திமை காணே.  4

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற் சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.  5

அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன் செம்பொன்செய் மேனி கமலத் திருவடி முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள் என்பினுட் சோதி இலங்குகின் றானே.  6

Scroll to Top