You cannot copy content of this page

009 படைத்தல்

படைத்தல்

ஆதியோ டந்தம் இலாத பராபரம்1 போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே  2

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே  3

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே  4

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே  5

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யானாய் புவனம் படைப்பானப் புண்ணியன் தானே  6

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும் தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ் கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே  7

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை காயத்திற்1 சோதி பிறக்கும்அக் காற்றிடை ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே 8

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங் கண்டச் சது(ர்)முகக் காரணன் தன்னொடும் பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே  9

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும் பாங்கார் கயிலைப் பராபரன் தானும் வீங்குங் கமல மலர்மிசை மேலயன் ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே  10

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன் நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும் பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன் ஆரண மாஉல காயமர்ந் தானே  11

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு அயன்ஓளி யாயிருந் தங்கே படைக்கும் வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே  12

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந் தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந் தாக்குங் கலக்குந் தயாபரன் தானே  13

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர் ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்துய ராக்கும் உடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே  14

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே  15

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே  16

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல் புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே  17

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங் காரிய காரண ஈசர் கடைமுறை பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து ஆணவம் நீங்கா தவரென லாகுமே  18

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்து பெற்றவன்1 நாதம் பரையிற் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே 19

ஆகாய மாதி சதாசிவ ராதியென் போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே 20

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில் அளியார் திரிபுரை யாமவள் தானே அளியார் சதாசிவ மாகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே  21

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி1 போதமு மாமே 22

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராக இசைந்திருந் தானே  23

ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மேஉல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான் ஒருவனு மேஉல1 கோடுயிர் தானே 24

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் அந்தார் பிறவி அறுத்துநின் றானே 25

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே  26

ஓராய மேஉல கேழும் படைப்பதும் ஓராய மேஉல கேழும் அளிப்பதும் ஓராய மேஉல கேழுந் துடைப்பதும் ஓராய மே உலகோடுயிர் தானே 27

நாதன் ஒருவனும் நல்ல இருவருங் கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர் ஏது பணியென் றிசையும் இருவருக் காதி இவனே அருளுகின் றானே  28

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம் மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் கிப்பரி சேஇருள் மூடிநின் றானே  29

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள் போதித்த வானொலி பொங்கிய நீர்புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே  30

Scroll to Top