பெரியாரைத் துணைகோடல்
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் கூடவல் லாரடி கூடுவன் யானே. 1
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும் மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும் நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. 2
அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. 3
தார்சடை யான்தன் தமராய் உலகினில் போர் புகழான் எந்தை பொன்னடி சேருவர் வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும் கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே. 4
உடையான் அடியார் அடியா ருடன்போய் படையார் அழலான் பதிசென்று புக்கே கடையார நின்றவர் கண்டறி விப்ப உடையான் வருகென ஓலம் என் றாரே. 5
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும் பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும் உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும் திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 6
இரண்டாம் தந்திரம் முற்றிற்று