You cannot copy content of this page

006 பிரத்தியாகாரம்

பிரத்தியாகாரம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே  1

நாபிக்குக் கீழே பன்னிரெண் டங்குலந் தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர் தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே 2

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே  3

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந் தேகத்துக் கென்றுஞ்சிதைவில்லை 4

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே  5

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே  6

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே  7

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே  8

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே  9

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ் சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் அறிப்புறு காட்சி அமரரு மாமே  10

Scroll to Top