You cannot copy content of this page

018 புறச் சமய தூடணம்

புறச் சமய தூடணம்

ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.  1

உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.  2

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.  3

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே.  4

சிவமல்ல தில்லை யறையே சிவமாந் தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு) அவமல்ல தில்லை அறுசம யங்கள் தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.  5

அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியு முயன்றில ராதலான் மண்ணின் றொழியும் வகையறி யார்களே.  6

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவியொன் றுண்டு தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை யாமே.  7

நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயமவ் வாறுட் படுவன கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா ஈறு பரநெறி யில்லா நெறியன்றே.  8

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவமெங்குந் தோய்வுற்று நிற்கின்றான் குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப் பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.  9

மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும் முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற் பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.  10

சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு மாயன் மயக்கிய மானுட ராமவர் காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.  11

வழியிரண் டுக்குமோர் வித்தது வான பழியது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் றழிவறி வார்நெறி நாடநில் லாரே.  12

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப்படுநந்தி பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில் ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.  13

அரநெறி யப்பனை யாதிப் பிரானை உரநெறி யாகி யுளம்புகுந் தானைப் பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே.  14

பரிசறி வானவன் பண்பன் பகலோன் பெரிசறி வானவர் பேற்றில் திகழுந் துரிசற நீநினை தூய்மணி வண்ணன் அரிதவன் வைத்த அறநெறி தானே.  15

ஆன சமயம் அதுஇது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த வுருவது வாமே.  16

அந்நெறி நாடி அமரர் முனிவருஞ் செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின் முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.  17

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை அறுமா றதுவான வங்கியு ளாங்கே இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.  18

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங் கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப் பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.  19

வழிசென்ற மாதவம் வைகின்ற போது பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட் டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.  20

Scroll to Top