You cannot copy content of this page

010 சகமார்க்கம்

சகமார்க்கம்

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.  1

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார் வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும் உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.  2

யோகச் சமாதியின் உள்ளே யகலிடம் யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.  3

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.  4

ஆதார சோதனை யானாடி சுத்திகள் மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே.  5

பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி யெறிவ னயிர்மன வாளாற் கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன் வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே.  6

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.  7

Scroll to Top