You cannot copy content of this page

011 சற்புத்திர மார்க்கம்

சற்புத்திர மார்க்கம்

மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.  1

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.  2

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரையன்னந் தாமரை நீலங் குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ் சிறுகால் அறநெறி சேரகி லாரே. 3

அருங்கரை யாவது அவ்வடி நீழற் பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.  4

உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயனது வாகும் பயந்து பிரிக்கிலப் பான்மைய னாமே.  5

நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.  6

திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின் கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.  7   

Scroll to Top