தாரணை
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே 1
மலையார் சிரத்திடை வானீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே சிலையார் பொதுவில் திருநட மாடுந் தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே 2
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே 3
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே 4
கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கங் கலந்த உயிரது காலது கட்டிற் கலந்த உயிருடல் காலமும் நிற்குமே 5
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையுமாமே 6
வாழலு மாம்பல காலும் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில் எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியதோர் பள்ளி அறையே 7
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் குரங்கினைக் கொட்டை பொதியலு மாமே 8
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் முன்னுறு கோடி உறுகதி பேசிடில் என்ன மாயம் இடிகரை நிற்குமே 9
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே 10