You cannot copy content of this page

005 ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவன்)

ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவன்)

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம தாமே.  1

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீட நாதமே போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே.  2

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3

தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம் பூனேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் தானேர் எழுகின்ற அகாரமது ஆமே.  4

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்து கருஐந்தும் செய்யும் அவைஐந்தே.  5

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே.  6

மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும் இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே.  7

பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்னடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே.  8

பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம் குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.  9

அன்று நின் றான்கிடந் தான்அவன் என்றென்று சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.  10

Scroll to Top