You cannot copy content of this page

004 சதாசிவ லிங்கம்

சதாசிவ லிங்கம்

கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழுந் தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே.  2

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.  3

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.  4

சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள சமயத்து எழுந்த இராசி ஈராறுள சமயத்து எழுந்த சரீரம்ஆ1 றெட்டுள சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 5

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு நடுவு படிகநற் குங்குமவன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.  6

அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.  7

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவமிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.  8

தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.  9

கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.  10

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே.  11

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி பச்சிமம் பூருவம் தற்புரு டன்னுரை தெற்கி லகோரம் வடகிழக் கீசனே.  12

நாணுநல் ஈசானன நடுவுச்சி தானாகும் தாணுவின் தன்முகம் தற்புருட மாகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.  13

நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே.  14

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே.  15

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும் சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும் சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே.  16

மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தான் நந்தி அஞ்சின் தனிச்சுடை ராய்நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில் மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.  17

ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.  18

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் பகலவன்1 பாட்டும் ஒலியே. 19

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.  20

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந் தன்மேனி தானாகும் தற்பரம் தானே.  21

ஆரும் அறியார் அகாரம் அவனென்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் மாறி எழுந்திடும் ஓசையதாமே.  22

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம் இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.  23

Scroll to Top