You cannot copy content of this page

004 துறவு

துறவு

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பதி காட்டும் அமரர் பிரானே.  1

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து பலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.  2

அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.  3

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே.  4

கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும் நாடி வளைந்தது நான்கட வேனலேன் ஆடல் விடையுடை அண்ணல் திருவடி கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே.  5

உழவன் உழஉழ வானம் வழங்க உழவன் உழவினிற் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட் டுழவன் அதனை யுழவொழிந் தானே.  6

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.  7

நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந் தேகப் படம்செய் துடம்பிட மாமே.  8

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் சிவன்றாள் பலபல சீவனு மாகும் நயன்றான் வரும்வழி நாமறி யோமே.  9

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.  10

Scroll to Top