You cannot copy content of this page

025 ஞானாதித்தன்

ஞானாதித்தன்

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து அந்த அபரம் பரநாத மாகியே வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.  1

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.  2

தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும் மூவர் பிரான்என முன்னொரு காலத்து நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும் மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.  3

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.  4

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க அனித்திடும் மேலை அருங்கனி ஊறல் கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.  5

நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வரும் தேரறி யாத திசையொளி யாயிடும் ஆரறி வாரிது நாயக மாமே.  6

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும் சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.  7

நாபிக்கண் நாசிநயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக உணர்ந்திருந் தாரே.  8   

Scroll to Top