You cannot copy content of this page

018 மோன சமாதி

மோன சமாதி

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம் மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.  1

காட்டும் குறியும் கடந்த வக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.  3

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன் பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன் சிறப்புடை யான்திரு மங்கையும் தானும் உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.  4

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரையில் அநுபூ திகத்தினுள் ளானே.  5

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே.  6

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறையறி யோமே.  7

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல நிட்களம் அல்ல சகள நிலையல்ல அற்புத மாகி அனுபோகக் காமம்போல் கற்பனை இன்றிக் கலந்துநின் றானே.  8

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.  9

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக் கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே.  10

கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம் தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம்பல தானே.  11

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப் புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.  12

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே .  13

வாடா மலர்புனை சேவடி வானவர் கூடார் அறநெறி நாடொறும் இன்புறச் சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே.  14

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.  15

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்துபின் நானும் அழிந்தமை நானறி யேனே.  16

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின் றேனே.  17

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.  18

Scroll to Top