You cannot copy content of this page

013 ஊழ்

ஊழ்

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.  1

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னில மானதே.  2

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.  3

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென் கான்நின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என் தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென் நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.  4

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென் கானத்து உழுவை கலந்து வளைக்கிலென் ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த ஞானத்து உழவினை நான்உழு வேனே.  5

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும் பாடது நந்தி பரிசறி வார்க்கே.  6   

Scroll to Top