You cannot copy content of this page

018 பூரணக் குகை நெறிச் சமாதி

பூரணக் குகை நெறிச் சமாதி

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித் தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி உடல்விட்டால் தானே.  1

தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது போன வியோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.  2

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன் ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.  3

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர் புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.  4

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.  5

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.  6

உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள் பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.  7

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல் இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.  8

Scroll to Top