சமாதிக் கிரியை
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில் நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1
எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில் அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித் தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே. 5
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாதம் நவபாத நேர்விழப் பொற்பம ரோசமும் மூன்றுக்கு மூன்றுஅணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு முஞ்சி படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8
நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக் கள்ளவிழ் தாமம் களபங்கத் தூரியும் தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம் மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப் போதறு கண்ணமும் நீறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகம் இள நீரும் குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார் மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் காதலில் சோடசம் காண்உப சாரமே. 13