You cannot copy content of this page

015 சிவ சொரூப தரிசனம்

சிவ சொரூப தரிசனம்

ஓதும் மயிர்க்கால் தோறும் அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.  1

உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.  2

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தன் ஆமே.  3

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே.  4

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறுபே ரொளியே.  5

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும் அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.  6

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால் சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.  7

துரிய அதீதம் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.  8

Scroll to Top