You cannot copy content of this page

025 ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள்

ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள்

அத்தாளத் தாள மதிலசை விற்கால்
ஒத்தாட வோவாதி யாவேத மூடுற
வைத்தாடி கூடல் தினமான மாகவே
சித்தான நந்திதென் னம்பலத் தாடுமே. 48

ஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கி
லேக வொளியா மிதய கமலத்தே
தாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னி
லாக மனங்கசிந் தானந்த மாகுமே. 49

ஆணவ மூலத் தகார முதித்திடப்
பேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத்
தாணு மகாரஞ் சதாசிவ மாகவே
ஆணவ பாச மடர்தல் செய்யாவே. 50

உண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல்
நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்
பண்ண லவன் பணி யாலிவன் பாலிடை
திண்ணிதிற் செய்கை சிவன் பணியாமே. 51

ஓடும் இருக்குங் கிடக்கும் உடனெழுந்
தாடும் பறக்கு மகண்டமும் பேசிடும்
பாடும் புறத்தெழும் பல்லுயி ரானந்தம்
கூடும் பொழுதிற் குறிப்பிவை தானே. 52

சித்தஞ் சிவமாம் சிவஞானி சேர்விடம்
சுத்தச் சிவாலயம் தொல்பாவ நாசமாம்
அத்த மழையக மானந்த மேலிடும்
முத்தம் பெருகும் முழுப்பொரு ளாகுமே. 53

திருமந் திரமே சிதம்பரந் தானுந்
திருமந் திரமே சிறந்த உபாங்கந்
திருமந் திரமே திருக்கூத்தின் செய்கை
திருமந் திரமே திருமேனி தானே. 54

திருமேனி தானே திருவரு ளாகுந்
திருமேனி தானே திருஞான மாகுந்
திருமேனி தானே சிவநேய மாகுந்
திருமேனி தானே தெளிந்தார்க்குச் சித்தியே. 55

நெற்றி நடுவுள் நினைவெழு கண்டமு
முற்ற விதையமு மோதிய நாபிக்கீழ்ப்
பெற்ற துரியமும் பேசிய மூலத்தை
யுற்ற வதீத மொடுங்கு முடனே. 56

பத்தி விதையிற் பயிரொன்று நாணத்தைச்
சித்தி தருவை ராக்கத்தாற் செய்தறுத்
துய்த்த சமாதி சிவானந்த முண்டிடச்
சித்தி திகழ்முத்தி யானந்தஞ் சித்தியே. 57

பள்ள முதுநீர் பழகிய மீனினம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோ டாடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே. 58

பாசம தாகும் பழமலம் பற்றற
நேசம தாய் நின்ற வாறாறு நீங்கிடக்
காசமி லாத குணங்கே வலசுத்த
மாசற நிற்ற லதுசுத்த சைவமே. 59

மனவு நனவு கனவது புந்தி

நினைவி லகந்தை சுழுனையுள் நிற்றல்
அதனை யறிசித்தந் துரியமிம் மூன்றின்
நினைவறல் மற்றது நேயத் தளவே. 60

மேலைத் திருவம் பலத்தா மிகுகலை

கோலிப் பரானந்த நாதாந்தக் கூத்தநிற்
சீலித்த சித்தர் சிவயோக சித்தராய்
மாலற்ற வர்சுத்த சைவத்து வாழ்வரே. 61

திருமூலர் திருமந்திரம் முற்றிற்று

திருச்சிற்றம்பலம்

நம்பிரான் திருமூலன் திருவடிகளே வாழ்க

Scroll to Top