You cannot copy content of this page

மேலத்திருமாணிக்கம்

மதுரை- தேனி சாலையில் மதுரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது உசிலம்பட்டி. இங்கிருந்து கோடங்கிநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி வழியே சுமார் 18 கி.மீ. தொலைவு பயணித்து மேலத்திருமாணிக்கம் கிராமத்தை அடையலாம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் மிகப் பழைமையானது.

ஆலய வரலாற்றுக்கு சாட்சியாகக் கல்வெட்டுகள் இருக்கின்றன. முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் சடாவர்மன் குலசேகரப் பாண்டி யன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலான பல மன்னர்களது கல் வெட்டுகள் இருக்கின்றன. அவற் றில், ‘தென்முட்ட நாட்டு திருமணிக் கயத்து உடையார் திருமணிக்கய முடைய நாயனார் கோயில்’ என்று இந்த ஆலயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோயில் இது என்று கருதப்படுகிறது.

இனி, ஆலய தரிசனம் செய்வோமா?

கிழக்கு நோக்கிய- மிகப் பரந்த ஆலயம். மூன்று பெரிய சந்நிதிகள். ஸ்ரீமீனாட்சி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் என்கிற சொக்கநாதர் ஆகிய மூன்று சந்நிதிகள். இவை மூன்றுமே அடுத்தடுத்து வரிசையாக கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இவை தவிர, ஸ்ரீவிநாயகர் சந்நிதியும் ஸ்ரீஆதிமூர்த்தி ஸ்வாமியின் அதிஷ்டானமும் அருள் பாலித்து வருகின்றன.

ஸ்ரீமீனாட்சி மற்றும் ஸ்ரீசுந்தரேஸ்வரர் சந்நிதிகளுக்கு எதிராக தனித் தனியே வாயில் உண்டு. ஸ்ரீமீனாட்சி அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள வாயில் மட்டும் பிரதான வாயிலாகக் கருதப்பட்டு எப்போதும் திறந்து காணப் படுகிறது.

இந்த வாயில் வழியே உள்ளே நுழையுமுன் இடப் பக்கம் அலுவலகம். உள்ளே நுழைகிறோம். முதலில் தரிசனம் தருபவர் ஸ்ரீவிநாயகர். பாசம், அங்குசம், மோதகம், எழுத்தாணி ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

இவருக்கு இடப் பக்கம் ஆலய வளாகத்தின் உள்ளேயே திருக்குளம். அழகான திருக்குளம். உள்ளே இறங்குவதற்கு இரண்டு பக்கங்களில் படிக்கட் டுகள். நீர் நிரம்பிய புனிதக் குளத்தைக் கற்பனையில் கொண்டு வந்து மானசீகமாக வழிபடுகிறோம்.

ஸ்ரீமீனாட்சியை தரிசிக்கச் செல்கிறோம். இங்கே அம்மைக்கும் அப்பனுக்கும் தனித்தனி கொடிமரம். பலிபீடம். நந்தி வாகனம்.

மதுரை மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரரை நினைவுபடுத்தும் இந்தக் கோயில் மிகப் பழைமையானது.

அம்மனை தரிசிக்கச் செல்லும் முன் விநாயகர் வடிவங்களில் ஒன்றான ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியின் விக்கிரகம் காணப்படுகிறது.

ஏகப்பட்ட சொத்துகள் இருந்து ஆறு கால பூஜை நடந்த திருக்கோயிலாம். அம்மனை தரிசிக்கப் படிகள் ஏறியதும் ஏழு தூண்கள் கொண்ட ஒரு முன்மண்டபம். மேலே மண் டப விதானத்தில், தல புராணத்தை விவரிக்கும் சிற்பம். அதாவது, ஐந்து தலை நாகம் ஒன்று, சிவபெருமானுக்கு பூஜை செய்கிறது.

அலங்கார மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, பிராகாரம், பரிவார தேவதைகள், பள்ளியறை என ஸ்ரீமீனாட்சி அம்மன் சந்நிதி விஸ்தாரமான ஒன்று. அன்னையின் சந்நிதிக்குள் செல்வதற்கு முன் அவளது அருமைப் புதல்வர்கள் ஸ்ரீவிநாயகர், சுப்ரமண்யர் ஆகியோரின் திருமேனிகள். அன்னையின் காவலுக்கு இங்கு துவாரபாலகிகள் இல்லை; அவர்களுக்குப் பதிலாக துவாரபாலகர்களே காவல் காக்கிறார்கள்.

கால்களைப் பாங்காக மடித்து வைத்து இவர்கள் அமைந்திருக்கும் பாணியே அழகு! உள்ளே சுமார் நாலரை அடி உயரத்தில் அழகாக தரிசனம் தருகிறாள் அன்னை மீனாட்சி. அம்மன் கோயில் விமானம் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கருவறை தாழ்வாகவும், பிராகாரம் உயரமாகவும் இருக்கும் அமைப்பு. அன்னையை வலம் வரும்போது இடம்புரி கன்னிமூல கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரி ஆகிய தெய்வத் திருமேனிகளை தரிசிக்கிறோம்.

மகா மண்டபத்தில் பள்ளியறை. மகா மண்டபத் தூண் ஒவ்வொன்றிலும் சிற்ப நயம் பளிச்சிடுகிறது.

அன்னையின் அருள் பெற்ற ஆனந்தத்தோடு வெளியே வருகிறோம்.

அடுத்து, வெளிப் பிராகாரம். ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய மூன்று சந்நிதிகளையும் சேர்த்து வலம் வரும் வகையில் இந்த வெளிப் பிராகார வலம் அமைந்துள்ளது.

வலத்தின் போது இடச் சுற்றின் முடிவில், அருள்மிகு கருத்தாண்டி ஆலயம். கருப்புசாமி என்று சொல்லப்படும் காவல் தெய்வம். ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தை எந்நேரமும் காவல் காப்பவர் இவர்தான்.

இவருடைய சந்நிதியில் விநாயகர், சிவன், அம்பாள், நாகர் முதலான விக்கிரகங்கள் உள்ளன. ”கருத்தாண்டி வகையறாவைச் சேர்ந்த குடும்பத்தினர் இன்றைக்கும் இரவுப் பொழுதில் ஆலயத்தைக் காவல் காத்து வருகிறார்கள்.

இவர்களின் பங்காளிகள் தற்போது பதினாறு பேர் இங்கு வசித்து வருகிறார்கள். தினமும் நான்கு பேர் வீதம் இரவு வேளையில் இந்த சுந்தரேஸ்வரர் கோயிலைக் கண் விழித்துக் காவல் காக்கிறார்கள்” என்றார் உள்ளூர்ப் பிரமுகரும் ஆலயப் பணிகளில் ஆர் வம் காட்டி வருபவருமான அழகுசொக்கு.

வலம் தொடர்கிறது. விநாயகர் சந்நிதி. இதை அடுத்து தனி சந்நிதியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான். நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சந்நிதி.

துவாரபாலகர்களாக வீரர்கள் காவல் காக்க, தேவியர்களான வள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீசுப்ரமண்யர் காட்சி தருகிறார். மயில் வாகனமும் மண்டபமும் விளங்க, அழகான சந்நிதி இது.

இந்த மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

இந்த சந்நிதியில் திருமணங்கள் அடிக்கடி நடக்குமாம். அக்கம்பக்கத்து கிராமங் களைச் சேர்ந்தவர்கள் தங்களது இல்லத் திருமணங்களை இங்கு நேர்ந்து கொண்டு நடத்துவது வழக்கம்.

பிராகார வலத்தின்போது – காமதேனு, அன்னம், மயில், ரிஷபம், குதிரை மற்றும் சிங்கம் முதலான வாகனங்களைக் காண முடிகிறது. மிகவும் நேர்த்தியுடன் செய்யப்பட்ட இந்த அழகிய வாகனங்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை.

ஆறு கால பூஜைகள் நடந்து உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட காலத் தில், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விக்கிரகங்கள் இந்த வாகனங்களில் கம்பீரமாக வலம் வருமாம்.

வலத்தைத் தொடர்ந்தால், ஸ்ரீசுந்தரேஸ்வரர் சந்நிதி. மாணிக்க சொக்கநாதர் என்றும் இவர் வணங்கப்படுகிறார். பிரமாண்டமான கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் மண்டபம் என சுந்தரேஸ்வரர், சவுகரியமாக அமர்ந் துள்ளார்.

தாமிரக் கவசம் போர்த்தப்பட்ட இந்தக் கொடி மரம் கி.பி.1729-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது ஆச்சரியமான செய்தி. இதைத் தெரிவிக்கும் வாசகங்கள் கொடிமரத்தின் அடியில், தாமிரக் கவசத்தில் பொறிக் கப்பட்டுள்ளன.

ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர் சந்நிதிகள் போலவே இங்கும் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆருத்ரா தரிசன மண்டபம், உற்சவர் மண்டபம், தனிப் பிராகாரம், பரிவார தேவதைகள் என விரிவாகவே அமைந்துள்ளது.

மகா மண்டபத் தூண் சிற்பங்கள் சிறப்பு. சூரியன், சந்திரன் ஆகியோரின் விக்கிரகங்கள் இந்த மண்டபத்தில் உள்ளன. பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் விஷ்ணு வணங்கும் சிவ வடிவம், பிரம்மா, துர்கை ஆகிய தெய்வங்கள் கோஷ்டத்தில் அருள் பாலிக்கின்றன.

திருமாலும் பிரம்மனும் அடி- முடி தேடிப் புறப்பட்டதை விளக்கும் அழகான சிற்பம், இறைவனின் நேர் பின் பக்க கோஷ்டத்தில் காணப்படுகிறது.

ஈசனின் பிராகார வலத்தில் பிரமாண்டமான விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், காக்கை வாகனத்துடன் கூடிய சனி பகவான் முதலான தெய்வங்களை தரிசிக்கலாம். தவிர, தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியதன் நன்றிக் கடனாக பக்தர்கள் வாங்கி வைத்துள்ள நாகர் விக்கிரகங்களையும் தரிசிக்கலாம்.

குழந்தை இன்மை, திருமணத் தடை, உடல் நலக் குறைவு உள்ளிட்ட பலவற்றுக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரரிடம் பிரார்த்தித்தால், எல்லாவற்றையும் களைகிறார். அதற்குப் பரிகாரமாக வாங்கி, பிரதிஷ்டை செய்யப்பட்டவையே இந்த நாகர் விக்கிரகங்கள். தவிர நவக்கிரகம், பைரவர் முதலானோருக்கும் வெளியே விக்கிரகங்கள் உண்டு.

அடுத்து, நாம் தரிசிப்பது- ஸ்ரீஆதிமூர்த்தி ஸ்வாமியின் அதிஷ்டானம்.

ஸ்ரீஆதிநாராயணமூர்த்தி என்பது காலப்போக்கில் மருவி, ஆதிமூர்த்தி என்று ஆகி உள்ளது (இவரை ஆதி முத்தையா என்றழைப்பதும் வழக்கில் உண்டு. பொதுவாக ஐயர் ஸ்வாமி என்றே சொல்கிறார்கள்). ஐந்து தலை நாகர் விக்கிரகம் ஒன்றின் கீழ் ஸ்ரீஆதிமூர்த்தி ஸ்வாமி தரிசனம் தருகிறார். அருகில் ஆதிமூர்த்தி ஸ்வாமிகளின் வம்சத்தில் வந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மேலும் ஐந்து தலை நாகர்களின் இரண்டு வடிவங்கள். ஸ்ரீஆதிமூர்த்தி ஸ்வாமிகளை வழிபடும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகமாம். இவருக்கான விருட்சம் மஞ்சனத்தி, அருகே வளர்ந்துள்ளது (ஆலயத்தின் ஸ்தல விருட்சம் வில்வம்).

இந்த வம்சத்தில் வந்த சுப்ரமணிய வாத்தியார் என்ப வர், தினமும் அதிஷ்டானத்துக்கு பூஜை செய்கிறார். அவர் நம்மிடம், ”ஸ்ரீஆதிமூர்த்தி ஸ்வாமிக்கு வேக வைத்ததையோ, கொதிக்க வைத்ததையோ நைவேத்தியம் செய்யக் கூடாது. நாட்டுச் சர்க்கரை, வாழைப்பழம், தேங்காய் போன்ற பொருட்களை வைத்தே நைவேத்தியம் செய்ய வேண்டும்.

ஆலயத்தில் மற்ற சந்நிதிகளுக்கு சாதத்தை வைத்து நைவேத்தியம் செய்யும் ஆலய அர்ச்சகர், ஆதிமூர்த்தி ஸ்வாமியின் சந்நிதி அருகே வந்ததும், சாதத்தைச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு கல்லில் வைத்து விட்டு, அதிஷ்டானம் அருகே வந்து வேறு எதையாவது வைத்து நைவேத்தியம் செய்வார். ஒருவேளை மறந்து சாதத்தை அதிஷ்டானத்துக்கு அருகே அர்ச்சகர் கொண்டு வந்து விட்டால் அவர் உடலில், ‘சுரீர் சுரீர்’ என சாட்டையடிகள் விழுமாம்! ஒரு முறை அர்ச்சகர் ஒருவருக்கு இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்தது.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். விவரம் அறியாத சிறுவன் ஒருவன் சிறிதளவு சாதத்தைக் கொண்டு போய், அதிஷ்டானத்தின் மீது வைத்து வணங்கினான். அடுத்த விநாடி எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை… பெரிய பாம்பு ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது.

அவன் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தான். பாம்பும் விடவில்லை. யதேச்சையாக எதிரே வந்த நான், சிறுவனை நிறுத்தி விவரம் கேட்க… பதட்டத்துடன் சொன்னான் அவன். பாம்பு அவனுக்கு எதிரே வந்து படமெடுத்து நின்றது. நான் பாம்பிடம், ‘அவன் சின்ன பயல். தெரியாமல் செய்து விட்டான். ஆர்வத்துடன் இப்படி பூஜை செய்ய வருபவர்களை இம்சிக்கலாமா?’ என்று கேட்டேன். வந்த வழியே பாம்பு விர்ரென்று போய் விட்டது” என்றார்.

ஸ்ரீஆதிமூர்த்தி ஸ்வாமியின் அதிஷ்டா னத்துக்கு அருகேயே பதினெட்டாம் படியாருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. இங்கு, ஒரு அரிவாள் பிரதானமாக வைத்து வணங்கப்படுகிறது. இதன் அருகே, ஒரு முனிவரின் விக்கிரகம். காசிக்குச் சென்று திரும்பிய அந்தணருடன் வந்தவர் இந்த முனிவர் என்கிறார்கள்.

தகவல் பலகை

தலத்தின் பெயர் : மேலத்திருமாணிக்கம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம்
மூலவர் பெயர் : ஸ்ரீ மீனாட்சியம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர்.
சிறப்பு : ஆதிமூர்த்தி ஸ்வாமி (ஐயர் ஸ்வாமி) அதிஷ்டானம்.
அமைந்துள்ள இடம் : மதுரை- தேனி சாலையில் மதுரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் வருகிறது உசிலம்பட்டி. இங்கிருந்து கோடநாயக்கன்பட்டி விலக்கு, தாடையம்பட்டி வழியாக சுமார் 18 கி.மீ. பயணித்தால் வரும் கிராமம் மேலத்திருமாணிக்கம்.
எப்படிச் செல்வது : உசிலம்பட்டியில் இருந்து பேருந்துகள் உண்டு. பேரையூரில் இருந்து கட்டளை வழியாக 24 கி.மீ. தொலைவு. திருமங்கலத்தில் இருந்து சேடப்பட்டி, கட்டளை வழியாக சுமார் 30 கி.மீ. தொலைவு. பேரையூர் மற்றும் திருமங்கலத்தில் இருந்து பேருந்துகள் உண்டு.

Scroll to Top