You cannot copy content of this page

002 பாடல்-2

02

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடநெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
ரிப்பழ மிடிப்பல் வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கினச மர்த்தனெனு மருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.

தோற்றுவாய்

நினைக்க முத்தியளிக்குந் திருவருணையில்நம் அருணகிரிப் பெருந்தகையார் முன் குமாரக்கடவுள் தோன்றி “முத்தைத்தரு” என்று அடியெடுத்துத் தந்து மறைய, அத் திருப்புகழொன்று மட்டும் பாடிச் சிவயோகத்திருக்க, முருகவேள் அசரீரியாக “நம்வயலூருக்கு வா” என்றருள்புரிய, அருணகிரியார் வயலூர்போய் ஆண்டவனைப் பணிந்து, திருப்புகழைப் பாடும் முறைமையை வினவ, கந்தவேள் இன்ன இன்னவைகளை வைத்துப் பாடென்று பணிக்க உடனே அருணகிரியார் வயலூரில் எழுந்தருளியுள்ள பொய்யா கணபதி சந்நிதியில் நின்று “கைத்தல நிறைகனி” என்ற திருப்புகழைப் பாடிய பின் தனக்கு முருகவேள் கூறிய அனுக்கிரகத்தை மறவேன் என்று இத்திருப்புகழைப் பாடினார்.

பதவுரை

இக்கு – கரும்பையும், அவரை – அவரையையும், நல்கனிகள் – நல்ல பழவர்க் கங்களையும், சர்க்கரை – சர்க்கரையையும், பருப்புடன் நெய் – பருப்போடு நெய்யினையும், எள் – எள்ளையும், பொரி – பொரியையும், அவல் – அவலையும், துவரை – துவரையையும், இளநீர் – இளநீரையும், வண்டு எச்சில் – தேனையும், பயறு – பயறையும், அப்பவகை – பலவகையான அப்பங்களையும், பச்சரிசி – பச்சரிசியையும், பிட்டு – பிட்டையும், வெள்ளரிப்பழம் – வெள்ளரிப்பழத்தையும், இடி பல்வகை – இடித்துச் செய்கின்ற பலவகையான சிற்றுண்டிகளையும், தனிமூலம் – (மதுரத்தினால்) ஒப்பற்ற கிழங்குகளையும், மிக்க அடிசில் – மிகுந்த அன்னத்தையும், கடலை – கடலையையும், பட்சணம் எனகொள் – (அடியார்களால்) அன்புடன் நிவேதிக்கப்படும் இவை முதலான சத்துவகுண ஆகாரங்களை உணவாகக் கொள்ளும், ஒரு விக்கினசமர்த்தன் எனும் – ஒப்பற்றவரும் விக்கினத்தை உண்டுபண்ணவும் நீக்கவும் வல்லவருமாகிய, அருள் ஆழி – கிருபாசமுத்திரமே, வெற்ப – மலையில் வசிப்பவரும், குடிலசடில – வளைந்த சடாபாரத்தையுடையவரும், வில்பரமர் அப்பர் அருள் – (ஒருவராலும் எடுக்க முடியாத மகாமேருகிரியாகிய வில்லையுடையவரும், பெரிய பொருளும்) உலகங்களுக்குத் தந்தையுமாகிய சிவபெருமான் அருளிய, வித்தக ஞானசொரூபரே! மருப்புடைய – தந்தத்தையுடைய, பெருமாளே – பெருமையிற் சிறந்தவரே! பக்கரை – அங்கவடியையுடையதும், விசித்திரமணி – விசித்திரமாக இரத்தினமணிகளைப் பதியவைத்துள்ள, பொன்கலணை இட்ட – பொன்னாற் செய்யப்பெற்ற சேணத்தையுடையதும், நடை – வேகமான நடையுடையதுமான, பட்சி என்னும் உக்ர துரகமும் – பட்சி என்று சொல்லப்படும் உக்கிரமுடைய குதிரையையும், (மயில்வாகனத்தையும்) நீபபக்குவமலர்த் தொடையும் – மலர்கின்ற பக்குவத்தில் தொடுத்த கடப்பமலர் மாலையையும், அக்குவடு – அந்த (கிரவுஞ்ச) மலையானது, படு ஒழிய – அடியோடு அழிந்துபோகவும், பட்டு உருவ – வேலாயுதமானது பட்டு உருவிப் பாயவும், விட்டு அருள்கை – விட்டருளிய கரத்திலே இலகும், வடிவேலும் – கூர்மையான (வடித்த) வேலாயுதத்தையும், திக்கு அது மதிக்கவரும் – எட்டுத் திக்குகளும் மதிக்குமாறு (கெம்பீரமாகப்) பறந்து வருகின்ற, குக்குடமும் – கோழிக் கொடியையும், ரட்சைதரும் சிற்றடியும் – ஆன்மகோடிகளை இரட்சித்து அரணாக விளங்கும் சிறியத் திருவடியையும், முற்றிய பன்னிரு தோளும் – முதிர்ந்த பன்னிரண்டு புயாசலங்களையும், செய்பதியும் – வயலூரையும், வைத்து – (உலகம் உய்யுமாறு) அமைத்து, உயர்திருப்புகழ்-எல்லாவிதத்திலும் உயர்ந்த திருப்புகழை, செப்பு என – சொல்லக்கடவாயென்று, எனக்கு அருள்கை – அடியேனுக்குத் திருவருள் பாலித்த அனுக்கிரகத்தை, மறவேன் – ஒருபோதும் மறக்கமாட்டேன்.

பொழிப்புரை

கரும்பு, அவரை, நல்ல பழ வகைகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு,(கொழுக்கட்டை) அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், இடித்துச் செய்யும்படியான பலவகைச் சிற்றுண்டிகள், (மதுரத்தினால்) நிகரற்ற கிழங்குகள், மிகுந்த அன்னம், கடலை, இவை முதலான (சத்துவகுண) ஆகாரங்களை உணவாகக் கொள்ளுகின்றவரும், ஒப்பற்றவரும், விக்கினங்களை ஆக்கவும், நீக்கவும் வல்லவருமான கருணையங்கடலே! கயிலாயமலையில் வசிப்பவரும், வளவான சடா மகுடத்தை யுடையவரும், (ஒருவராலும் எடுக்க முடியாத மகாமேருகிரியாகிய) வில்லையுடையவரும், பெரிய பொருளும், உலகங்களுக்கெல்லாம் தந்தையுமாகிய சிவபெருமானருளிய ஞானவடிவினரே! ஒற்றைக் கொம்பையுடைய பெருமையிற் சிறந்தவரே! அங்கவடியை யுடையதும், விசித்திரமானதும் ரத்தினங்களைப் பதிய வைத்துள்ளதுமான பொன்னாலாகிய சேணத்தையிட்டு அலங்கரிக்கப்பட்டதும், வேகமான நடையுடையதும், உக்கிரம் பொருந்தியதுமாகிய பட்சியென்று சொல்லும்படியான (குதிரையையும்) மயில் வாகனத்தையும், (இலக்கத்தொன்பன் வீரர்களையும் மாயையால் மயக்கிய) கிரவுஞ்ச மலையை அடியோடு (அதன் மாயையும்) பிளந்தழியுமாறு விட்டருளிய (ஞான சக்தியாகிய) வடிவேலாயுதத்தையும், அட்டதிக்குகளும் மதிக்குமாறு கெம்பீரமாகப் பறந்து வருகின்ற குக்குடதுவசத்தையும், எல்லா உலகங்களுக்கும் உயிர்களுக்கும் காவலாக இருந்து திருவருள்பாலிக்கும் சிறியத் திருவடியையும் வல்லபத்தில் முதிர்ந்த பன்னிரு புயாசலங்களையும் வயலூர் என்னும் புனித திருத்தலத்தையும், அமைத்து (அருள்நாத வொலியால்) உயர்ந்த திருப்புகழை (உலகம் உய்யுமாறு) சொல்லக் கடவாயென அடியேனுக்குத் திருவருள் புரிந்த அருள்நெறித் தொண்டை ஒரு காலத்தும் மறக்க மாட்டேன்.

விரிவுரை

பட்சியெனும் உக்ரதுரகம் :- மயிலைக் குதிரையாக உருவகம் புரிந்தனர்.

“சம்ப்ரம மயூரதுரகக்கார” (சந்தனசவாது) – திருப்புகழ்.

“ஓகார பரியின்மிசை” (இரவியென) ”

“நடநவில் மரகததுரகம்” (தவநெறி) ”

“வெங்கலாப ஒருபராக்ரம துரகம்” (பொதுவாய்) ”

“ஆடும்பரி” -அநுபூதி

என்ற அழகியத் திருவாக்குகளையுஞ் சிந்தித்துச் சித்தம் மகிழ்க.

பக்குவ மலர்த்தொடை :- மலர்ந்துவிடில் வண்டுகள் எச்சில் புரிந்து விடுமாதலால் வண்டுகள் நுகராமுன் மலரும் பக்குவத்தில் “சிறையளி புகுதாமுன்னஞ் சிறுகாலை யெழுந்திருந்து” என்றபடி அன்பர்களால் விதிப்படி எடுத்துத் தொடுத்தணியப்பட்ட மாலை.

அக்குவடுபட்டொழிய :-கிரவுஞ்ச மலையின் மீது வேல்விட்ட வரலாறு :

அகத்தியர் அரனார் அருள் பெற்றுத் தென் திசைநோக்கி வரும் வழியிலே மாயமாபுரம் வந்தபோது, சூரபன்மன் துணைவனாகியத் தாரகாசுரனுக்கு உறுதுணையாயிருந்து பற்பல மாயங்களைப் புரிந்து தேவர்களையும், முனிவர்களையும் கொல்லுகின்ற கிரவுஞ்சனென்னும் அசுரன் கண்டான். அன்றில் வடிவத்தை யுடையானாகிய அவனுடைய மாயைகளையும் வல்லமைகளையும் அளவிட்டு உரைத்தல் அரிது. மண்ணுலகை விண்ணுலகாக்குவான்; விண்ணுலகை மண்ணுலகாக்குவான்; தினகரனைச் சந்திரனாக்குவான்; சந்திரனை தினகரனாக்குவான்; மேருவை அணுவாகவும், அணுவை மேருவாகவும், வடவா முகாக்கினியை நீராகவும், நீரை வடவாமுகாக்கினியாகவும் இவ்வாறே ஒன்றையொன்றாக மாற்றுவான். அவன் மாயா வலியைக் கூறவல்லார் யாவர்? இத்தகைய மாயவல்லனாகிய அவ்வசுரத் தலைவன் விந்தமலை போல் சிகரங்களை ஆகாயத்திற்போக்கி, பெரியதோர் மலைவடிவங்கொண்டு தன்னுள் வழியுமொன்று செய்து நின்றான். அம்மலைக்குள் ஒரு குரோச தூரஞ் சென்ற அகத்திய முனிவர் வழிகாணாது நிற்ப, பின்னர் ஒரு வழிகாணப்பட்டது; அவ்வழிச் செல்லப் பின்னரும் வழியிலதாயிற்று. தவமுனிவர் மயங்கி ஒரு பக்கம் சிறுவழித் தோன்ற அதன்கண் நடந்த காலை அக்கினி சுவாலித்துச் சூழ, மழை சோனையாகப் பொழிய, இடி இடிக்க, இருட்படலஞ் சூழுமாறு மாயத்தை செய்தான்.

முனிவனார் இது அறிவிலிகளாம்அவுணரது மாயமென்று உண்மையுணர்ந்து கைக்கொட்டி நகைத்துச் சீறி “நன்று நன்று இவன் வல்லமையை யொழிப்பேனென்று தங்கரதத்திலிருந்த தண்டாயுதத்தாற் புடைத்துத் துவாரமுண்டாக்கிச் சாபங்கூறுவாராயினார். “வெய்யோய்! நீ அசுர வுருமாறி இம்மலைவடிவாய் இராக்கதருக்கு இருப்பிடமாகி இருடியருக்கும் இமையவருக்கும் இடர்மிகப் புரிந்து பல நாட்கள் இருப்பாயாக. எமது தண்டாயுதத்தாற் புழைப் படுத்தப்பட்ட இவைகளெல்லாம் மாயைகளுக்கு இருப்பாய் விளங்கிக் குமரக்கடவுளின் நெடுஞ்சுடர் வேலால் பொடியாக அழியக் கடவாய்” என்று கூறிச் சென்றனர்.

மாற்படு நமதுபாணி வலிகெழு தண்டா லுன்றன்
பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக் கெலாம்
ஏற்புடை யிருக்கையாகவெம்பிரா னுதவுஞ் செவேள்
வேற்படைதன்னிற் பின்னாள் விளிகுதி விரைவி லென்றான்.
-கந்தபுராணம்

அவ்வாறே யவ்வசுரன் மலைவடிவாயிருந்துபலருக்கும் மாயஞ் செய்து வந்தனன். பின் அறுமுகத் தண்ணலார் ஆணைப்படி அமர்புரிய வந்த வீரபாகு தேவர், தாரகனுடைய மாயந் தெரியாது, அம்மலைக்குள் அவனைப் பின் தொடர்ந்துச் சென்று மயங்கினார். முதல்வர் சென்று திரும்பிலரே? யாது நிகழ்ந்தனவோ என்று வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தரர், வீரராக் கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்னும் எண்மரும், இலக்கம் வீரரும், பூத வெள்ளங்களும் அவ்வாறே சென்று கிரவுஞ்சமலையில் மயங்கிக் கிடந்தனர்.

இதனை நாரதர் ஓடிச்சென்று நம் கதிர் வேலண்ணலிடம் விண்ணப்பம்புரிய, அவர் நெடுஞ்சுடர் வேலையேவி அக்கிரவுஞ்ச மலையைப் பொடிப்பொடியாக அழித்தருளி, தாரகனையும் மாய்த்து, மயங்கிய இலக்கத்தொன்பான் வீரர்களுக்கும் இன்பமளித்தனர்.

திக்கது மதிக்கவரு குக்குடம்:- குமாரமூர்த்தியினது கொடியாக விளங்கும் சேவல் அட்டதிக்குகளும் அதன் வலியைக் கண்டு மதிக்குமாறு மகாவீரத்தோடு உலவுகிறது என்பது இதனால் நன்கு விளங்குகின்றது. வெற்றித் துவசமாகிய அச்சேவலானது சிறகையசைத்தவுடன் அண்டகடாகம் உடைபட்டது; உடுக்குலங்கள் உதிர்ந்தன. கிரிகளும் மகாமேரு பருவதமும் இடிந்து விட்டன என்கின்றார்.

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகை யென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம்
இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடி பட்டவே.
-அலங்காரம்.

“வானகிரி யைத்தனது தாளிலிடியப் பொருது,
வாகைபுனை குக்குட பதாகைக் காரனும்”
-வேளைக்காரன் வகுப்பு.

ரட்சைதரு சிற்றடி :- அருள்நெறியிலுதவி புரிவதும், பிறைச் சந்திரனையொத்த பற்களுடன் பாசக் கயிற்றைக் கையில் கொண்டு வடவாக்கினி போன்ற விழிகள் சுழல வரும் இமயத்தூதுவரைப் பிறகிடச் செய்வதும், நினைந்தவை யனைத்துந் தருவதும், அடியாருடையப் பகைகளை யழிப்பதும் குமாரமூர்த்தியின் திருவடிகளே யாதலின் உயிர்களுக்குக் காவலாயிருந்து உதவுகின்ற சரணம்.
“முதல்வினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
முடுகுவது மருணெறியி லுதவுவது நினையுமவை
முடியவரு வதுமடியர் பகைகோடி சாடுவதும்”
-சீர்பாத வகுப்பு

“உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” -திருமுருகாற்றுப்படை.

முற்றிய பன்னிருதோள் :-அளவுபடுத்த இயலாத அவுணர் குழாங்கள், வரத்தாலும், வாள் முதலியப் படைகள் பற்றிய கரத்தாலும், மலைபோன்ற உரத்தாலும், விரைவாகச் செல்லுகின்ற சரத்தாலும் மிகச் சிறந்து தம்மை வெல்வார் ஒருவருமில்லை யெனத் தருக்கி ஆயிரத் தெட்டண்டங்களிலும் நிறைந்து வந்த காலத்து அவ்வவுணர்சேனை முழுவதையும், அரியரி பிரமாதியரை ஏவல் கொண்ட சூரபன்மாவையும் வென்ற தோளானபடியால் வல்லபத்தில் முதிர்ந்ததென வியந்தனர்.

“அலகி லவுணரைக் கொன்ற தோளென” -திருப்புகழ்

“எதிர்படு நெடிய தருவடு பெரிய கடாமுமிழ்
நாகமேக மிடிபட மற்பொரு
திண்சிலம் படங்க மோதிப்பிடுங்கின

ஃ ஃ ஃ ஃ

இபரத துரக நிசிசரர் கெடவொரு சூரனை
மார்பு பீறியவனுதி ரப்புனல்
செங்களந் துளங்கி யாடிச்சிவந்தன” -புயவகுப்பு செய்ப்பகுதி:- (செல் - வயல், பதி - ஊர்) ஆறுமுக வள்ளல் அருணகிரியார்க்குத் திருப்புகழைப் பாட அருணையில் அடியெடுத்துத் தந்து மீண்டும் அசரீரியாக நம் *வயலூருக்கு வாவென அருளி, வயலூரில் அருணகிரியாருக்கு இன்ன இன்ன பொருளை வைத்து திருப்புகழை விருப்பமொடு செப்பென அருளினார். ஆதலால் அருணகிரியார் திருப்புகழ் பாடும்விசேட அனுக்கிரகம் பெற்றதும், முருகன் கனவிலும் நனவிலும் பலகாலுந் தரிசனந் தந்தருள் புரிந்ததும், தெய்வீகம் பொருந்தியதுமான திருத்தலமானபடியால் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே வைத்துப் பாடுவாராயினர். இத்தலத்தில் அளவுகடந்த அன்பு சுவாமிகளுக்கிருந்ததெனத் தெரிகிறது.

உயர்திருப்புகழ்:- திசைகள்நான்கிலும் அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று இறும்பூதெய்தும் சித்திர கவித்துவசத்த மிகுத்து அருளாலும் பொருளாலும் சந்தத்தாலும் ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

“பூர்வ, பச்சிம தெட்சிணை உத்தர திக்குள
பக்தார்க ளற்புத மெனவோதும்
சித் கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழ்”
-(பத்தர்கணப்ரிய) திருப்புகழ்.

“அரியபெரிய திருப்புகழ்” -(இதமுறு) திருப்புகழ்.

திருப்புகழையோதுவோருக்கு ஞானமும்சகல நன்மைகளும் வானம் அரசாள வரமும் மனோலயத்தால் கிடைக்கும். முத்திவீடும் உண்டாகும்.

ஞானம் பெறலாம் நலம்பெறலாம் எந்நாளும்
வானம் அரசாள் வரம்பெறலாம்–மோனவீ
டேறலாம் யானைக்கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேயிக் கூறு.

விருப்பமொடு :- திருப்புகழை அன்போடு பாடவேண்டும்.

“உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன்”
-(உனைத்தினந்) திருப்புகழ்.

இவ்வுயர் திருப்புகழை மறவாமல்விருப்பமொடு பலகாலும் பாடிப் பரவுதல் செய்யும் அடியார்களுக்கு ஆண்டவன் தண்ணருள் புரிகிறான்.
“பலகாலு முளைத்தொழு வோர்கள்
மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே”
-(நிலையாத) திருப்புகழ்.

இக்கு….கடலை :- இத்தகைய ஆதாரங்களால் சத்துவ குணம் உண்டாகும். ஆதலால் விநாயகர் சத்துவகுண ஆகாரங்களையே விரும்புகின்றார்.

விக்கினசமர்த்தன்:- தன்னை நினைந்தார்க்கு நிர்விக்கினமும் நினையாதவர்களுக்கு விக்கினமும் புரிவதில் மிகவுஞ் சாமர்த்தியமுடையவர். தன்னை நினையாது கடல் கடைய ஆரம்பித்ததனால் விடத்தையுண்டாக்கினார். பின்னர் நினைத்ததனால் அமிர்தத்தை உண்டாகச் செய்தார்.

அருளாழி – வழிபடும் அன்பர்களது இடர் கடியும் பெருமானான படியால் பெருங்கருணைத் தடங்கட லென்றனர்.

“கருநோயறுத் தெனது மிடிதூள் படுத்திவிடு
கரிமாமுகக் கடவுள் அடியார்கள்
கருதாவகைக்கு வர மருள்ஞானதொப்பை”
-(இருநோய் மலத்தை) திருப்புகழ்.

“வழிபடு மவரிடர் கடி கணபதி” -தேவாரம்

குடிலச்சடிலம்,–வளைந்தசடாபாரம்.

“குடிலசடை பவுரிகொடு தொங்க” -(அமுதுததி) திருப்புகழ்.

விற்பரமர் அப்பர் :- வில்-ஒளி மயமானவர். சிவம் என்கிற ஒன்றே எல்லாவற்றிற்கும் பெரிய பொருள். அவர் ஒருவரே உலகங்களுக்குத் தந்தை.

“உமா ஸஹாயம் பரமேச்வரம்ப்ரபும் த்ரிலோசனம். நீலகண்டம் ப்ரசாந்தம்.”

(பொருள்) பிரபுவாய், முக்கணனாய், நீலகண்டனாய், மிகுசாந்தனாய், பூத காரணனாய், சமத்தசாட்சியாய், உமையொடு கூடினவனாயுள்ள பரமேச்வரனை.- – யஜூர்வேத கைவல்யோப நிடதம்.
வித்தக மருப்பு:- வித்தகம்-ஞானம், மருப்பு-தந்தம், வித்தகம் என்ற பதத்தை மருப்பு என்ற பதத்திற்கு அடைமொழியாகக் கொண்டு மேன்மை பொருந்திய தந்தத்தை யுடையவரென்றும் பொருள் கூறலாம்.

கருத்துரை

வித்தகமருப்புடைய விநாயகமூர்த்தியே! மயில்வாகனத்தையும், கடப்பமலர் மாலையையும், வடிவேற்படையையும், கோழிக் கொடியையும், திருவடிக் கமலங்களையும், பன்னிரு புயாசலங்களையும், வயலூரையும் அமைத்து விருப்பத்தோடு உயர்த் திருப்புகழை ஓதுவாயென (முருகப் பெருமான்) அருள் புரிந்த திருவருட்பணியை ஒருபோதும் மறவேன்.

Scroll to Top