You cannot copy content of this page

003 பாடல்-3

03

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

பதவுரை

தம்பிதனக்கு ஆக – தம்பியாகிய முருகவேள் பொருட்டு, வனத்து அணைவோனே – கானகத்தில் (யானை வடிவங் கொண்டு) சென்றவரே! தந்தை வலத்தாள் – தந்தையாராகியச் சிவபெருமானை வலஞ் செய்ததனால், அருள் – வழங்கிய, கை கனியோனே – கரத்தில் ஏந்தியக் கனியையுடையவரே! அன்பர் தமக்கு ஆன – அன்புடையோர்கட்கு உரிமையான, நிலைப்பொருளோனே – நிலைத்த பரம்பொருளே, ஐந்துகரத்து – ஐந்து திருக்கரங்களையுடைய, ஆனைமுக – யானை முகங்கொண்ட, பெருமாளே – பெருமையின் மிகுந்தவரே: உம்பர்தரு – தேவதருவாகிய கற்பகம் போலவும், தேனு – காமதேனுவைப் போலவும், மணி – சிந்தாமணியைப்போலவும், கசிவு ஊறி – என் மனமானது கசிந்து அன்புடையதாகியும், ஒண்கடலில் தேன் அமுதத்து – ஒளிபெற்ற பாற்கடலில் பிறந்த இனிய அமுதம் போன்ற, உணர்வு ஊறி – ஞான உணர்ச்சி ஊற்றெடுத்தும், இன்ப ரசத்தே பலகாலும் பருகி – சிவபோகமாகியப் பேரின்ப வெள்ளத்தை அடியேன் பலகாலும் பருகியும் மகிழுமாறு, என்றன் உயிர்க்கு – அடியேனுடைய உயிருக்கு, ஆதரவு உற்று அருள்வாயே – ஆதரவு செய்து திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

முருகவேள் வள்ளியை யடையும் பொருட்டு யானை வடிவுடன் கானகத்தில் வந்தவரே! தந்தையை வலஞ்செய்து அவரால் தரப்பட்ட பழத்தைக் கையில் தாங்கியவரே! அன்புடைய அடியார்கட்கு உரிமையான நிலைத்த பரம்பொருளே! ஐந்து கரங்களும் ஆனைமுகமும் படைத்த பெருமிதமுடையவரே! கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணிபோல் என் உள்ளம், ஈகைக்குணம் உடையதாகி ஒளிபெற்று பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்ற ஞான உணர்வு ஊறி மெய்ஞ்ஞான இன்ப அமுதைப் பலகாலும் பருகி மகிழ, அடியேனுடைய உயிருக்கு ஆதரவாகி அருள்புரிவீர்.

விரிவுரை

உம்பர்தரு:-தேவலோகத்தில் ஐந்து விருட்சங்கள் இருக்கின்றன. அவை கற்பகம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம் என்பனவையாம். இவைகளில் நினைத்ததைத் தரும் ஆற்றலுடையது கற்பகம். கற்பகம் போல நினைத்த மாத்திரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் இயல்பு நம்மிடம் அடைய வேண்டும்.

தேனு:-

காமதேனு :- இது அமிர்தத்துடன் பிறந்தது. கேட்டதைத் தரும் இயல்புடையது. வசிட்டாதி மகரிஷிகட்கு உதவுவது, இதுபோல் வறியவர்கட்கு வழங்கும் இயல்பும் நம்பால் அமையவேண்டும்.

மணி :-

சிந்தாமணி :- இது சிந்தித்ததைத் தரும் சிறப்புடையது.

இதுபோல் நாமும் மற்றவர்கள் சிந்தித்ததை அறிவின் நுட்பத்தால் அறிந்து கூடுமானவரை கரவாமல் கொடுக்க வேண்டும்.

ஒண்கடலில் தேனமுதத்துணர்வூறி :-

பாற்கடல் வெண்மையான ஒளிவீசிக்கொண்டு விளங்கும். அக்கடலில் தோன்றிய அமுதம் போன்ற இனிய மெய்ஞ்ஞான உணர்ச்சி ஊற்றெடுக்க வேண்டும்.

இன்பரசத்தே பருகி பலகாலும்:-

ஞான உணர்ச்சியால் பேரின்பநலம் விளையும். அத் தேன் போன்ற இன்பரசத்தைப் பலகாலும் பருகி சிவமயமாக விளங்க வேண்டும்.

என்றனுயிர்க்காதரவுற் றருள்வாயே :-

அடியேனுடைய உயிருக்கு உறுதுணையாகஉதவி செய்து அருள் புரிவீராக.

தம்பிதனக் காகவனத் தணைவோனே:-

முருகப்பெருமான் வள்ளிநாயகிக்குஅருள்புரியும் பொருட்டு வள்ளிமலைக்குச் சென்றார். அந்த ஆன்மாவுக்குப் பக்குவம் விளைவிக்கும் பொருட்டு வேடனாகவும், வேங்கை மரமாகவும், வேந்தன் மகனாகவும், கிழ வேதியனாகவும் பல அற்புதத் திருவிளையாடல்கள் புரிந்தார்.

வள்ளி நாயகியின்பால் இருந்தபந்தபாசம் விலகும் பொருட்டு விநாயகரை யானைவடிவாக வருமாறு நினைத்தார். தம்பியின் வேண்டுகோளுக்கு இணங்கி விநாயகர் ஓங்கார யானையாக வடிவெடுத்து அவ்வனத்திற் சென்றார்.

யானையைக் கண்டவுடன் வள்ளிப்பிராட்டியார் `உயிருக்கு இறுதி வரும்போது உறுதியளிப்பார் யாரும் இல்லை. தாய் தந்தை உடன்பிறந்தார்என்ற அனைவரும் உதவி செய்கிலர்’ என்று எண்ணி பற்றற்று, பற்றற்ற பரமனைப் பணிந்தாள்.

தந்தைவலத்தால் அருள் கைக்கனியோனே:-

நாரதர், தவத்தால் பெற்றமாதுளங்கனியை, சிவமூர்த்தியின் திருமுன் வைத்து வணங்கினார்.

அக்கனியை ஆனைமுகக் கடவுளும்ஆறுமுகக் கடவுளுங் கேட்டனர். “அகில உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதுக்குள் வலம் வருபவனுக்கு இக்கனி” என்றார் சிவபெருமான்.

எல்லா உலகங்களும் சிவத்துள் அடக்கம் என்று கருதி தந்தையை வலம் வந்து, கனிப் பெற்றார் விநாயகர். இவ்வரலாற்றின் நுட்பம் யாது? இறைவனுக்குள் எல்லாம் அடங்கியிருக்கின்றன. இறைவன் எல்லாப் பொருளிலும் இருக்கின்றான். “அணோரணீயாந் மஹதோ மஹீயானாத்மா” என்பது உபநிடதம்; ஆதலால் விநாயகமூர்த்தி சிவத்துக்குள்ளே எல்லாவற்றையும் பார்த்தருளினார். (இதன் விளக்கத்தை 3-ம் பக்கம் பார்க்க)

ஐந்துகரத்து ஆனைமுகப்பெருமாளே :-

கணபதி, ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து திருக்கரங்களால் புரிகின்றார். ஆனைமுகம் ஓங்கார வடிவை உணர்த்துகின்றது.

கருத்துரை

விநாயகப் பெருமானே! அடியேனுடைய ஆன்மாவுக்கு ஆதரவு காட்டி யருள் புரிக.

Scroll to Top