You cannot copy content of this page

004 பாடல்-4

04

விடமடைசு வேலை யமரர்படை சூலம்
விசையன் விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேது மறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீன னிவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை யறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவ ராவி வெருவஅடி கூர
அசலுமறி யாம லவரோடே
அகல்வதென டாசா லெனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே.

பதவுரை

இறைவன் மகள் – உக்ரசேனன் மகளாகிய தேவகி, வாய்மை அறியாதே-நடக்க இருக்கும் உண்மையை உணராமற்படி, இதயம் மிகவாடி – உள்ளம் பெரிதும் வருந்தி, பிளைநாத-பிள்ளைப் பெருமானே! கணபதி என-கண்களுக்குத் தலைவரான விநாயகரே என்று, நாமம் முறை கூற-திருநாமங்களை எடுத்துக் கூறித் துதித்ததனால், இடையர் சிறுபாலை-யாதவர்களுடையச் சிறிய அளவுடைய பாலை, திருடிகொடுபோக-களவு செய்துகொண்டு போகவும், அடையலவர் ஆவி வெருவ-பகைவர்கள் உயிர் அஞ்சவும், அடிகூர- திருவடியைச் சிலர் விரும்பவும், அசலும் அறியாமல் அவர் ஓட-அயலார் அறியாமற்படிக்கு அஞ்சி அவர்கள் ஓடவும், அகல்வதுஎனடா சொல் எனவும் – ஓடுவது என்னடா சொல்லுக என்று கூறவும், முடிசாட-தலைகளை யறுத்துக் கொள்ளவும், அறிவு அருளும் – கண்ணபிரானுக்கு அறிவைத்தந்த, ஆனைமுகவோனே-ஆன்முகமுடைய அண்ணலே! விடம் அடைசுவேலை- நஞ்சு பொருந்திய கடலும், அமரர்படை-தேவர்படையும், சூலம்-சூலமும், விசையன் விடுபாணம்- அர்ச்சுனன் விடுகின்ற கணையும், எனவேதான் விழியும்-சமானம் என்று கூறும்படியான கண்களும், அதிபாரவிதமும்உடை மாதர்-மிகுந்த கனமுடைய தனங்களும் உடைய பெண்களின், வினையின்விளைவு ஏதும் அறியாதே-சாகசத் தொழிலால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்துகொள்ளாது, கடி உலவு பாயல்-வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு எனாது-பகல் இரவென்ற வேறுபாடு இல்லாமல், கலவிதனில் மூழ்கி வறிதாய-போகத்தில் மூழ்கி ஏழ்மையடைந்த, கயவன்-கீழ்மகனும், அறிவு ஈனன்-அறிவு குறைந்தவனும் ஆகிய, இவனும்-அடியேனும், உயிர்நீடு-உயர்வு நீண்ட, கழல் இணைகள் சேர- இரண்டு திருவடிகள் சேர்ந்து இன்புற, அருள்வாயே-திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

உக்ரசேன மன்னனுடையபுதல்வியாகிய தேவகி தேவி நிகழ இருக்கும் உண்மையை உணராமல் உள்ளம் மிகவும் வருந்தி “பிள்ளைப் பெருமானே! கணபதியே” என்று அவர் திருநாமங்களைக் கூறித் துதி செய்து முறையிட்டதனால் கண்ணபிரானுக்கு யாதவர்களுடையச் சிறிய அளவுள்ள பாலைத் திருடிக்கொண்டு போகவும், பகைவர்களுடைய உயிரை பயப்படச் செய்யவும், சிலர் அவருடையத் திருவடியை விரும்பவும், பிறர் அறியாமல் அப் பகைவர்கள் அஞ்சி ஓடவும், அவ்வாறு ஓடுகின்ற அவர்களைக் கண்டு, “எங்கே போகிறீர்கள்? சொல்லுக” என்று கூறி அவர்கள் தலையைத் தகர்க்கவும், அறிவை யருளுகின்ற ஆனைமுகக் கடவுளே! நஞ்சுடன் கூடிய கடலையும், தேவர் ஆயுதத்தையும், சூலத்தையும், அர்ச்சுனன் பாணத்தையும் ஒத்த கண்களும் மிகுந்த கனமுள்ள தனங்களும் உடைய விலைமகளிரின் சாகசத் தொழிலால் விளைவதை ஒன்றும் அறியாதவனாகி வாசனை மிக்க படுக்கையின்மீது பகல் இரவு என்னாதபடி போகத்தில் மூழ்கி ஏழ்மையடைந்த கீழ் மகனும் அறிவற்றவனும் ஆகிய அடியேன் உயர்ந்து நீண்ட உமது சரணாரவிந்தங்களில் சேர அருள் புரிவீர்.

விரிவுரை

விடமடைசுவேலை:-

பொதுவாக மகளிர் கண்கள் விசாலமாக இருக்க வேண்டும். “விசாலாட்சி” என்று அம்பிகைக்கு ஒரு பேருண்டு. இங்கே விலை மகளிர் கண்களைக் குறிப்பிடுவதால் விடத்துடன் கூடிய கடல் என்கிறார். தம்பால் வந்தவர்களை நஞ்சுபோல துன்புறுத்துங்கண் என்பது குறிப்பு.

அமரர் படை சூலம்:-

பொதுவாக ஆயுதம் பிறரைக்கொல்லுந் தன்மையுடையது. இங்குச் சிறப்பாக தேவர்களுடைய ஆயுதம் என்றதனால் விரைந்து தவறாது கொல்லும் என்று நிச்சயிக்கப்பட்டது. அதுபோல் விலைமகளிர் கண்கள் தம்மிடம் வந்தவர்களை அழிக்கும் தன்மையதுவாம்.

விசையன் விடுபாணம்:-

பொதுவாக வீரர்கள் விடும்பாணம் கொடியது. இங்குச் சிறப்பாக அர்ச்சுனன் விடும் பாணம் மிகவும் கொடியது. அணுவளவும் குறிபிரளாமற் கொல்லும் இயல்புடையது. அதுபோல் விலைமகளிர் விழி அழிக்கும் ஆற்றல் படைத்தது.

அதிபார விதமும் :-

பருத்த தனங்களையுடைய விலைமகளிர் தமது தனங்களைத் தந்து இளைஞர்களின் தனங்களைப் பறிப்பர்.

வினையின் விளைவேதும் அறியாதே:-

வினை-தொழில்.

வந்தவர் மயங்கி, அவர்களைப் பராசக்தியென்றும், அவர் வீடு முத்தியுலகமென்றும், அவர் தரும் போகம் மோக்ஷ இன்பமென்றும், எண்ணுமாறு சாகசம் பல புரிந்து தன்னை அடுப்பாரைக் கெடுப்பர்.ஆ! ஆ! ஒன்றா? இரண்டா? அவர் புரியும் வினை அளப்பில. அதன்விளைவு என்ன? உடல் நலன் குன்றி பற்பல பிணிகள் உண்டாகும். செல்வம் போய் நல்குரவு வரும். உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பழிப்பர்; பகைப்பர்; இறுதியில் நரகமும் எய்தும்; இவைகளை யுணராமல் பலர் கெடுகின்றனர்.

கடியுலவு பாயல் :-

கடி – வாசனை.

விலைமகளிர் தமது படுக்கையைநன்கு அலங்கரித்து அர்கஜா, சவ்வாது, புனுகு, பன்னீர், கஸ்தூரி முதலிய நறுமணங்களைத் தடவி அப்படுக்கையைப் பரகதியாக மதிக்குமாறு புரிவர். அவர்கள் மீது வீசும் துர்க்கந்தத்தையும் அந்த நற்கந்தம் மறைக்கும்.

பகலிரவெனாது:-

அம்மகளிர் பால் சென்றுமயங்கியோர் பகல் இரவு என்ற வேறுபாடே யில்லாமல் கெட்டழிவர்.

கலவிதனில் மூழ்கி வறிதாய:-

“விலைமாதருடைய கலவியில் முழுகி” என்றதனால் அதில் அழுந்திவிட்ட ஆபத்தை யுணர்த்துகின்றனர்.

வறிது-வெறுமை. ஒன்றும் இல்லாதவறியவனாகி விடுகின்றனன்.

கயவன்:-

கீழ்மகன். கயமை-கீழ்மை. திருவள்ளுவர் ஒழிபியலில் கயமை என்று ஓர் அதிகாரமே வகுத்துள்ளார். “கயவர் உடம்பாலும் உறுப்புக்களாலும் மனிதர்களே போல் தான் இருப்பார்கள். சிறிதுகூட வேற்றுமையே யிராது” என்று மிகவும் வருந்திக் கூறுகின்றார்.

மக்களே போல்வர்கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

கயவரைப்பற்றி வரும் பத்துக்குறளும் மிகவும் சுவையாக அமைந் திருப்பதை ஆண்டுக் காண்க.

அறிவீனன் :-

அங்கவீனனைக் காட்டிலும் அறிவீனனேஉலகத்திற்குப் பாரம். பரிதாபப் படத்தக்கவன். அறிவின்மையே பெரிய ஆபத்து. அதனால் அடையுங்கேடு அனந்தம்.

“அறிவின்மையின்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாதுலகு” -திருக்குறள்.

இறைவன் மகள்…… இதயமிகவாடி…..கணபதியெனாம முறைகூற :-

மதுரைக்கு அரசன் உக்ரசேனன்;யதுகுல மன்னன். இவன் கம்சனுக்குத் தந்தை. இவனுடைய மகள் தேவகி.

தேவகி விநாயகரை உபாசித்தவள்.இவள் புதல்வராகிய கண்ணபிரான் ஆயர்பாடியிலே யசோதை வீட்டிலே வளர்ந்தனர். கம்சன், பூதகி, த்ருணாவர்த்தன், சகடாசுரன் முதலிய அரக்கர்கள் பலரைக் கண்ணனைக் கொல்லுமாறு ஏவினான். அதனையறிந்த தேவகி நிகழ இருக்கும் உண்மையை உணர மாட்டாதவளாய் (கண்ணனால் அவ்வரக்கர்கள் மாண்டொழிவார்கள் என்பதை யறியாதவளாய்) புத்திர பாசத்தினால் தன் மகனுக்கு இடர் வருமோ என்று கருதி அஞ்சினாள். அஞ்சிய அவள் தனது உபாசனா மூர்த்தியாகிய விநாயகரைத் துதித்தாள்.

பிள்ளைக்கு இடர்வராமல் தடுத்துஅருள்புரியுமாறு, “ஏ! பிள்ளைப் பெருமானே! கணபதியே! காப்பாற்று” என்று கூறித் துதி செய்தாள்.

இடையர் சிறுபாலை திருடிகொடுபோக :-

கண்ணபிரான் யாதவர்கள்வீட்டில் உள்ள பாலைத் திருடினார் என்பதன் உட்பொருள், அவர்களுடையத் தூய உள்ளத்தைக் கவர்ந்தனர் என்பதாகும்.

“உள்ளங்கவர் கள்வன்” -தேவாரம்.

அடையலவராவி வெருவ :-

அடையலர்-பகைவர். கண்ணனைக் கொல்லவந்த அரக்கர்கள் ஆவியஞ்சி நின்றார்கள்.

அடிகூர :-

உத்தவர் முதலிய அடியவர்கள் கண்ணனுடைய திருவடியிடத்து அன்பு வைத்தார்கள்.

அசலும் அறியாமல் அவர் ஓட:-

கொல்ல வந்த அசுரர்கள்பிறர் அறியாமல் ஓடினார்கள்.

அகல்வதெனடா சொல் எனவுமுடிசாட :-

அஞ்சியகலும் அவர்களைப் பார்த்து, ”எங்கே ஓடுகின்றீர்கள்” என்று கேட்டு அவர்கள் தலைகளைக் கண்ணபிரான் அறுத்து அழித்தனர்.

அறிவருளும் ஆனைமுகவோனே :-

அத்தகைய நுண்ணியஅறிவை ஆனைமுகமுடைய, அறிவாகரராகிய விநாயகர் கண்ணபிரானுக்கு அருள் புரிந்தார்.

திருடி கொடு போக, ஆவிவெருவ,அடிகூர, முடிசாட, அறிவருளினார். உம்மைத் தொக்கியது.

தேவகி செய்த பிரார்த்தனையால் விநாயகர் கண்ணபிரானுக்கு அறிவுக்கு அறிவாகி நின்று அவரைக் கொல்லுமாறு வேடம் புனைந்து வரும் அரக்கரின் மாயத்தை யுணர்த்தி அருள் புரிந்தார்.

ஆதலால் இறை வழிபாட்டினால்எல்லா நலன்களும் எய்துவர்.

கருத்துரை

கண்ணனுக்கு அறிவுநலம் அருளியவிநாயகமூர்த்தியே! மாதர் வசம் சேராது உமது மலரடிச் சேர அருள் புரிவீர்!

Scroll to Top