You cannot copy content of this page

001 விநாயகர் துதி

விநாயகர் துதி

1

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்குண மணமருள் பெருமாளே.

பதவுரை

கைத்தலம் – திருக்கரத்திலே, நிறைகனி – நிறைந்தகனியையும், அப்பமொடு அவல்பொரி – அப்பத்தோடு அவல்பொரிகளையும், கப்பிய-உண்ணுகின்ற, கரிமுகன்-யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானது, அடிபேணி- திருவடிகளை விரும்பி, கற்றிடும் அடியவர் – (அறிவு நூல்களை) ஓதுகின்ற அடியாரது, புத்தியில் உறைபவ-அறிவினிடத்தில் கலந்துவாழ்கின்றவரே! கற்பகம்-கற்பகத்தருவைப்போல் அடியவர் நினைத்தவையனைத்தும் அருளவல்லவரே! முத்தமிழ் அடைவினை-மூன்று தமிழின் முறையினை, முற்படு கிரிதனில்-
கிரிகளுக்கெல்லாம் முதன்மையானதாகிய மகாமேருகிரியில், முற்பட எழுதிய- எல்லா மொழிகளுக்கும் முதன்மையுற எழுதிய, முதல்வோனே-எல்லாத் தேவர்களுக்கும் முதன்மையானவரே! முப்புரம் எரிசெய்த-மூன்று புரங்களையும் தழலெழ நகைத்து எரித்தருளிய, அச்சிவன் உறைரதம்-அந்த (அளக்கரிய புகழையுடைய) சிவபெருமான் ஊர்ந்த இரதத்தினுடைய, அச்சது பொடி செய்த- (தன்னை நினையாத காரணத்தினால்) அச்சை முறித்துப் பொடியாக்கிய, அதிதீரா-மிகுந்த தீரத்தன்மையுடையவரே! அத்துயர் அதுகொடு-இன்பரச சக்தியாகிய வள்ளி நாயகியாரை மணந்து ஆன்மாக்களுக்கு பேரின்பத்தை யருள வேண்டுமென்றதாகிய அந்த இரக்கத்தைக் கொண்டு, சுப்பிரமணி படும்- சுப்பிரமணியக் கடவுள் சென்ற, அப்புனம் அதனிடை-வள்ளியம்மையாரிருந்த அந்தத் தினைப்புனத்தில், இபம்ஆகி-யானை வடிவங்கொண்டு, அக் குறமகளுடன்-அந்தக் குற மாதாகிய வள்ளிநாயகியாரோடு, அச்சிறு முருகனை- அந்த இளம்பூர்ணனாகிய முருகப்பெருமானை, அக்கணம் மணம் அருள்-அத் தருணத்திலேயே விவாகமாகும்படித் திருவருள் புரிந்த, பெருமானே- பெருமையிற் சிறந்தவரே! என-என்று துதிசெய்ய, வினை கடிதேகும்- தீவினைகள் விரைவில் நீங்கும், (ஆதலால்) மத்தமும்-ஊமத்தமலரையும், மதியமும்-சந்திரனையும், வைத்திடும் அரன்மகன்-சடாமுடியின் கண் (கருணைகொண்டு) தரித்துள்ள சிவபெருமானது திருக்குமாரராகிய, மல் பொரு திரள்புய-மல்யுத்தம் செய்கின்ற திரண்ட தோள்களையுடைய, மத யானை- மதங்களைப் பொழிகின்ற யானைமுகத்தையுடையவரை, மத்தள வயிறனை- மத்தளம்போன்ற அழகிய வயிற்றையுடையவரை, உத்தமி புதல்வனை-உத்தம குணங்களின் வடிவமாகிய உமாதேவியாரது புத்திரராகத் தோன்றிய மகா கணபதியை, மட்டவிழ் மலர் கொடு-தேன் துளிக்கின்ற மலர்களைக்கொண்டு அர்ச்சித்து, பணிவேன்-வணங்குவேன்.

பொழிப்புரை

கரதலத்திலே நிறைந்துள்ள பழம், அவல், பொரி, அப்பம் முதலியவைகளை யருந்துகின்ற யானை முகத்தையுடைய கணேச மூர்த்தியின் திருவடிக் கமலங்களை விரும்பி, (பதியினிலக்கணங்களையோதும் அறிவு நூல்களைக்) கற்கின்ற அடியாரது சித்தத்தில் எப்போதும் நீங்காது வாழ்கின்றவரே! நினைத்ததைத் தரவல்ல கற்பக விருட்சம்போல் (சரணாரவிந்தங்களை இடைவிடாது துதிக்கும்) தொண்டர்கள் நினைந்தவையெல்லாம் எளி
தில்தரவல்ல வள்ளலே! எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை மலைகளுக்குள் முதன்மையுடைய மகாமேருகிரியில் எழுந்தருளிய முதன்மையானவரே! (தேவர்கள் வேண்ட) திரிபுரங்களைச் சிரித்தெரி கொளுத்திய சிவபெருமான் எழுந்தருளிய பெரியத் தேரினுடைய அச்சை (தன்னை நினையாத காரணத்தால்) ஒடித்துத் துகள் செய்த மிகுந்த தைரியமுடையவரே! இன்பரச சக்தியாகிய வள்ளி பிராட்டியாரைத் திருமணம் புரிந்து உயிர்களுக்கு இன்பத்தை யருளவேண்டுமென்று கருணைகொண்டு, தினைவனத்திற்குச் சென்ற குமாரக் கடவுள் வள்ளி பிராட்டியார் இசையாமையால் (இவ்வேளை துணைசெய்ய வேண்டுமென நினைக்க) யானை வடிவங்கொண்டு சென்ற குறவர் குடியிற்றோன்றிய வள்ளி நாயகியாருடன் என்று மிளைய பெருமாளாகிய அறுமுகக் கடவுளை மணம் புணர்த்தி திருவருள் பாலித்த பெருமையிற் சிறந்தவரே! என்று துதி செய்தால் (துன்பத்தை விளைவிப்பதாகிய) வினைகளனைத்தும் விரைவில் விலகும். (ஆதலால்) ஊமத்த மலரையும், பிறைச் சந்திரனையுஞ் சடாமகுடத்தில் கருணைகொண்டு சூடிக்கொண்டுள்ள பாவங்களை யழிப்பவராகிய சிவபெருமானது திருக்குமாரரும், மல்யுத்தம் புரிகின்ற திரண்ட தோள்களையுடையவரும், மதங்களைப் பொழிகின்ற யானை முகத்தை யுடையவருமாகிய விநாயக மூர்த்தியை, மத்தளம் போன்ற அழகிய திருவுதரத்தை யுடையவரை, உத்தமியாகிய உமாமகேஸ்வரியாரது அருட் புதல்வரை தேன் துளிக்கும் புதுமலர்களால் அர்ச்சித்து (வினைகள் விலகும் பொருட்டு அன்புடன்) வணங்குவேன்.

விரிவுரை

இத்திருப்புகழிலுள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்களாகும். 100 என்பதைப் பிள்ளையார் என்று சொல்வது (சில ஊர்களில்) மரபு. அதனால் இத்திருப்புகழை இரட்டைப் பிள்ளையார் என்பார்கள்.

கைத்தலம்- கையாகிய இடம் என விரித்துப் பொருள் கொள்க.

நிறைகனி- ஞானரசம் பொருந்திய மாதுளங்கனி.

உவகாரி அன்பர்பணி கலியாணி எந்தையிட
முறைநாய கங்கவுரி சிவகாமி
ஒளிரானையின் கரமில் மகிழ்மா துளங்கனியை
ஒருநாள் பகிர்ந்தவுமை யருள்பாலா”
(சிவஞான புண்டரீக) திருப்புகழ்.

இக்கனி விநாயகருக்குச் சிவபெருமானால் தரப்பட்டது. (கைநிறையப் பழம் என்றும் பொருள் கொள்ளலாம்).

விநாயகமூர்த்தி கனிப் பெற்ற வரலாறு

முன்னொரு காலத்து, ஆயிரம் நரம்புகளுடைய மகதி யாழில் வல்லவராகிய நாரதமுனிவர், தமக்கு அரிதிற் கிடைத்த தேவ மாதுளங்கனியைச் சிவபெருமானது திருவடியில் வைத்து வணங்கினர். தீராத இன்பமருளும் பரம காருண்யமூர்த்தியாகிய பரமேஸ்வரன், அக்கனியை ஏற்று நாரதருக்கு நல்லருள் புரிந்தனர்.

பின்னர் விநாயகக் கடவுளும், குமாரக் கடவுளும் தந்தையை வணங்கி அக்கனியை தமக்குத் தருமாறு வேண்டினர். சிவமூர்த்தி அப்பழத்தை இரண்டாகப் பகிர்ந்து அளிக்கலாமன்றோ? அவ்வண்ணமளித்தாரில்லை.

(ஒரு காலத்தில் பிருதிவி முதல் நாதமீறான அளவிலா உலகங்களை யெல்லாம்ஒரு நாளில் சுற்றி வருகின்றவன் எவனோ அவனே தேவர் யாரினும் பெரியோன்; அவனே பரப்பிரமன் என்று தேவர் முதல் பதினெண் கணத்தவர்களுங் கூடிய சபையிலே பேசித் தீர்மானித்தார்கள். அவ்வாறு சுற்றி வருவதற்கு அரியரி பிரமாதியருந் தம்மாலாகாதென வாளாவிருந்தனர்.
கண்ணுதற் கடவுள் தேவர்களுக்கு நேர்ந்த இவ்வையத்தை நீக்கத் திருவுளங்கொண்டு, சர்வலோகங்களையும் ஒரு நொடிப் பொழுதினுள் வலம் வரவும், எல்லாவற்றையும் அறியவும், படைக்கவும், காக்கவும், அழிக்கவும், மறைக்கவும், அருளவும், வல்லவர் முழுமுதற் கடவுளாம் முருகக்கடவுள் ஒருவரே என்று தேவரும் யாவரும் தெளிந்துய்யக்கருதி ஓருபாயஞ் செய்வாராயினர்.)

“நீவிர் இருவரும் ஒரு கனியைக் கேட்பின் எவ்வாறு உதவுவோம். நும்மில் எவர் ஒரு கணத்துள் அகில உலகையும் வலம் வருகின்றனரோ அவருக்கே இப் பழம் உரியதாகும்” என்று திருவாய் மலர்ந்தனர். இச்சொல் முடியுமுன்னரே சர்வலோக நாயகராகிய சரவணோற்பவர் மரகதமயில் மீதூர்ந்து விரைவிற் சென்றனர். வாயுவேகம், மனோவேகம் என்று சொல்லப்பெற்ற வேகங்கள் அவர் போன வேகத்திற்கு ஓரணுத் துணையேனும் ஒவ்வா. அப்பரமன் சேர்ந்த வேகத்தை அறையவல்லார் யாவர்? அதலம், விதலம், சுதலம் மகாதலம், தராதலம், இரசாதலம், பாதலம் என்னும் ஏழனையும், அவற்றிற்கு மேலுள்ள எட்டிலக்கம் யோசனை தூரமுள்ள கனிட்டம் என்னும் எட்டாவது பாதலத்தையும், பூமிக்கணுள்ள சத்ததீவம், கடல்கள், மலைகள், முதலியவைகளையும், மேகம், வாயு, சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்களையும், துருவ நட்சத்திரமுள்ள புவர்லோகம், இந்திரன் வாழும் சுவர்லோகம், மார்க்கண்டேயர் முதலான முனிவர் குழாம் வசிக்கும் சனலோகம், பிதிரர் வாழும் தவலோகம், சனகாதியர் தவம் புரியும் மகாலோகம், சதுர்முகன் வாழும் சத்தியலோகம், வடபத்திரசயனன் வாழும் வைகுண்டலோகம் முதலிய வுலகங்களையும், இங்ஙனமே பிரமாண்டங்களையும், பிருதிவி அண்டத்திலுள்ள ஆயிரங்கோடி அண்டங்களையும், அப்பு அண்டம், தேயு அண்டம், வாயு அண்டம், ஆகாய அண்டம், தன்மாத்திராண்டம், அகங்கார புவன முத
லாக நாதமீறாயுள்ள உலகங்களான பஞ்ச கலைகளுக்கும் உட்பட்ட மந்திரம், பதம், வன்னம், தத்துவம், புவனம் என்னும் சொற் பொருட் பிரபஞ்சங்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வலம் வந்து திருக்கயிலையை நோக்கினார்.

யாவராயினு மிக்கனி விழைந்துளோர் கணத்திற்
பூவலங்கொடு வருதிரே லவர்க்கெனப் புகலத்
தூவியம்பசுந் தோகைமா மஞ்ஞைமேற் றோன்றித்
தேவர்சேனைகா வலன்கிரி யிழிந்துபார் சேர்ந்தான்.
-பழநித் தலபுராணம்.

“செகமுழுது முன்புதும்பி முகவனொடு தந்தைமுன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா”
-(அனைவரு) திருப்புகழ்

“இலகுகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட தடபாரமேருவுடன்
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்”
-சீர்பாத வகுப்பு.

“ஆரமதுரித்தகனி காரணமுதற் றமைய
னாருடனுணக்கைபுரி தீமைக்காரனும்
ஆகமம் விளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக்கரனும்”
-வேளைக்காரன் வகுப்பு.

“வாரணமுகன் தனது தாதையை வலஞ்சுழல
வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடி வருங்குமரன்”
-பூதவேதாள வகுப்பு.

உலகங்கள் முழுவதும் ஒரு நொடிப்பொழுதில் சுற்றிவருவதற்குள் மலைகளெத்தனை? கடல்களெத்தனை? திக்கு யானைகள் திக்கு நாகங்களெத்தனை? திசைப்பாலகர்கள் எத்தனையர்? சூரிய சந்திர அக்கினி வாயு மேகங்கள் நட்சத்திரங்கள் எவ்வளவின? பிரமவிட்டுணுக்களும் சத்தியலோக வைகுண்டங்களும், இந்திரர்களும், சுவர்க்கங்களும் உருத்திரர்களும் புவனங்களும் எண்ணிறந்தவரும் எண்ணிறந்தவையுமாகும். யாவரையும் யாவற்றையுங் கண்டு கண்டு செல்ல அவர்களும் இவரை அஞ்சலிசெய்து வணங்கியுள்ளார்கள். இது எங்ஙன முடியுமெனின்?
எங்கும் வியாபியாய், சர்வஜீவசாட்சியாய் சர்வலோகங்களையுந் தனக்கு அங்கமாகக் கொண்ட அத்துவா மூர்த்தியாகிய நம் அறுமுகப் பெருமானார்க்கு இஃதோர் அருஞ்செயலோ? இது பற்றியே,

“அநேஜதேகம் மநஸோ ஜவீயோ
நைநத்தேவா ஆப்நுவன் பூர்வமர்ஷத்
தத்தாவதோ (அ)ந்யாநத்யேதிதிஷ்டத்
தஸ்மிந்நபோ மாதரிச்வா ததாதி!”

என்று ஈசோபநிடதம் முழங்குகிறது.(அதாவது பதி ஒருவர், அவர் அசைபவரல்லர். மனத்தைப் பார்க்கினும் அதிக விரைவாகச் செல்பவர். ஐம்பொறிகளினும் மிக்க வேகமாக முன் செல்லும் இப்பதிப்பொருளைப் பொறிகளிலொன்றும் அடையமாட்டாது. அவர் திரமாக இருந்து வரைவாகச் செல்லும் மன முதலிய கருவிகளையுங் கடந்து செல்கிறார். காற்று அவருழையிருந்தே உயிர்களுக்கு உடலினசைவைக் கொடுக்கிறது என்பதேயாம்)

எங்கும் முகங்களும், எவ்விடமுங் கண்களும், எவ்விடமுஞ் செவிகளும், எவ்விடமுங் கைகளும், எவ்விடமுந் திருவடிகளும், எவ்விடமும் வடிவமாகப் பெற்றார். ஒருவர்க்கன்றி ஏனையோரால் இக் காரியம் முடியாது. அத்துணைப் பெருஞ் சிறப்புடைய அகண்ட வியாபக சச்சிதானந்தப் பரம்பொருள் தாம் என்பதை விளக்குதற்கன்றோ நம் குமார குரு உலகையொரு நொடியில் வலம் வந்து அவ்வுண்மையை விளக்கியருளினார். இதனை, யசுர்வேத சுவேதாச்சுவதர உப நிடதக் கருத்துடையதாகிய,

எங்கணும் பணிவதனங்க ளெங்கணும் விழிகள்
எங்கணுந் திருக்கேள்விக ளெங்கணுங் கரங்கள்
எங்கணுந் திருக்கழலடி யெங்கணும்வடிவம்
எங்கணுஞ் செறிந்தருள் செயுமறுமுகத் திறைக்கே;

என்ற கந்த புராணத் திருவாக்காற் காண்க.

இங்ஙனஞ் சண்முகப் பிரபு அகில உலகையும் வலம் வந்து கயிலை வருமுன், கணபதி சிவத்தை விட்டு உலகம்
அன்னியமாயில்லை; சர்வலோகங்களிலும், பாலுடன் நீரும், வெளியுடன் காற்றும், உடலுடனுயிரும், மலருடன் மணமும், மணியுடனொளியும் போல் பிரிவறக் கலந்து அத்துவிதமாக வியாபித்து நிற்பவர் தந்தையன்றோ? என ஆராய்ந்து கறை மிடற்றண்ணலை வலம் வந்து “உலகமெங்கணும் நிறைந்து நிற்கும் நின் மலப்பொருள் தேவரீரன்றோ? தங்களை வலம் வந்தது உலகைச் சுற்றியதனோடொக்கும். ஆதலால் கனியைத் தந்தருள்க” என்றனர். மலைமகள் மகிணன் மனமகிழ்ந்து உடனே கனியை மூத்த பிள்ளையார் கரத்தளித்தனர். பன்னிருகைப் பரமன், பரமசிவத்தால் “பழம் நீ” என்று பகரல் பெற்றார்.

இவ்வரலாற்றின் நுண் பொருள்

ஒரு கனியை இருவரும் விரும்பினால் கனியைப் பகிர்ந்து தரலாகாதோ? அகில உலகங்களையும் ஒரு கணத்தில் ஆக்கியும் அளித்தும், நீக்கியும் ஆடல் புரிகின்ற எல்லாம் வல்ல இறைவர் மற்றொரு கனியை உண்டாக்கித் தரலாகாதோ? காரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இரு கனிகளையே வழங்கிய வள்ளல் அன்றோ அவர்! தம்பியே கனி பெறுக என்று தமையனாரும், தமையனே கனி பெறுக என்று தம்பியாரும் ஒற்றுமையுறலாகாதோ? ஒரு கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடியில் வலம் வருவது முயற்சிக்குத் தக்க ஊதியமாகுமா? சகல வல்லபமும் உடைய வல்லபை கணபதிக்கு உலகை வலம் வரும் வண்மையிலதா? சிவத்தை வலம் வருவதே உலகை வலம் வருவதாகும் என்பது அறிவின் வடிவாய ஆறுமுகவேள் அறியாததா? இன்னோரன்ன பல ஐயங்கள் நிகழுமன்றோ? ஆதலின் இதன் நுண்பொருளை விளக்குதும். அன்பர்கள் கூர்ந்து உன்னியுணர்க.

சிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையுங் காணுந் தன்மை ஒன்று. எல்லாவற்றினுள் சிவத்தைக் காணுந் தன்மை மற்றொன்று
இதனைத்தான் ஆனைமுகன் ஆறுமுகன் என்ற இருவடிவங்களாக நின்று ஒருபரம் பொருள் நமக்கு உணர்த்தியது.

அரும்பு-சரியை; மலர்-கிரியை; காய்-யோகம், கனி-ஞானம். எனவே, சிவத்தின் கண் இருந்தது ஞானம் என அறிக. ஞானத்தில் விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்க விநாயகரும் வேலவரும் அக்கனியை விரும்பி யருளினார்கள். ஞானத்தைச் சிதைக்க முடியாதென்பதைத் தெளிவாக்குகின்றது அக்கனியை அரனார் சிதைத்துத்தராமை; சிவத்திற்கு அந்நியமாக வேறு இன்மையைத் தெரிவிக்க விநாயகர் விமலனை வலம் வந்து ஞானமாகியக் கனியைப் பெற்றனர். “எல்லாம் அவனே” என்பதைத் தெரிவிக்க வடிவேற் பரமன் உலகை வலம் வந்து தாமே ஞானக் கனியாக நின்றனர். ஞானமே அவர்; ஞான பண்டிதன்; ஞானந்தானுருவாகிய நாயகன். ஞானமாகிய கனியைத் தாங்கும் விநாயகர் ஞானாகரர்.

வினாயகர் வேறு, முருகர் வேறு என்று மலையற்க. ஐங்கரனும் அறுமுகனும் ஒன்றென உணர்க. பாலும் சுவையும் போல் என்று அறிக. பால் விநாயகர்; பாலின் சுவை கந்தவேள். சுவையைப் பால் தாங்கி நிற்கின்றது. அதுபோல் ஞானக் கனியை விநாயகர் தாங்கி நிற்கின்றனர்.

அப்பமொடு அவல் பொரி-அப்பம், அவல், பொரி முதலிய சத்துவகுண ஆகாரங்களை அறிவு வடிவமாகிய விநாயக மூர்த்தி விரும்பி உண்கிறார்.

கரிமுகன்- யானைமுகன்; கரத்தையுடையதால் யானைக்குக் கரியெனப் பெயருண்டாயிற்று. சினையாகுபெயர்.

விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு

கயிலையங்கிரியில் ஒரு பாலுள்ள சித்திரமண்டபத்து அடியார்க்கருள் புரியுமாறுவேதங்கள் “ஐயாவென வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியராம்” சிவபெருமான்
உமாதேவியாரோடு எழுந்தருளினார். அச் சித்திர மண்டபச் சுவர்களில் எழுதியுள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு உலவுங்கால், ஒரு பால் ஏழுகோடி மகாமந்திர சொரூபங்களும், அவைகளுக்கெல்லாம் முதலிய சமஷ்டி வியஷ்டி பிரணவ வடிவ மந்திர சொரூபங்களும், அதில் ஆண் யானை பெண் யானை வடிவங்களும் வரைந்திருக்க, அவற்றுள் சமஷ்டிப் பிரணவ வடிவமாகிய பெண் யானைச் சித்திரத்தின் மீது அகில சக அண்ட நாயகியாகிய அம்பிகையும், வியஷ்டி வடிவமாகிய ஆண் யானைச் சித்திரத்தின் மீது ஆலமுண்ட அண்ணலும் விழிமலர் பரப்பினர்.

அங்ஙனம் பார்த்தவுடன் கோடி சூரியப் பிரகாசத்துடனும், யானை முகத்துடனும், நான்கு புயாசலங்களுடனும், விநாயகமூர்த்தி யவதரித்தனர்.

பிடியத னுருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. -தேவாரம்

கற்றிடும் அடியவர் புத்தியில்உறைபவ:- கல்வியானது இறைவன் திருவடியை விரும்பி ஐயந்திரிபுமயக்கமற பதிஞானந் தலைப்படுமாறு கற்கப்படுவதாம். அங்ஙனமன்றி, கேவலம் பொருள் மாத்திரம் விரும்பிக் கற்றல் கூடாது என்பதும் கடவுள் கழலிணைக் கஞ்சங்களிடத்து அன்பு வைக்காமல் படித்தல் பயனற்றது என்பதும் இதனாற்றெளிக.

“அரகரா வெனமூடர் திருவெணீ றிடாமூடர்
அறிவுநூல் கலாமூடர்” -(இரதமானதேனூறல்) திருப்புகழ்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -திருக்குறள்

பதிஞானம் பெற விழையாதுபொருள் விழைந்து கல்வி பயில்வோர் மக்கட்பதடியாவர்.

திருந்துமுதுக் குறைவெய்தக் கற்பதன்றித்
திருவெய்தக் கற்கின்றோரும்
பொருந்தவரி தாயமக்கட்பதடியெனக்
கற்றுணர்ந்தோர்புகல்வரன்றே; -கூர்மபுராணம்

பதி நூல் கல்லாதவர் உள்ளத்தில் பரமன் வாசஞ் செய்யான்.

“கல்லார் மனத்துடனில்லா மனத்தவ
கண்ணாடியிற் றடங் கண்டவேலா”
(என்னால் பிறக்கவும்) திருப்புகழ்.

ஆதலால் பதி நூல் கற்றவர் உள்ளத்தில்இறைவன் வசிப்பவன் என்பது புலனாகும்.

“கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை” -திருவிசைப்பா

கற்பகம் என வினைகடிது ஏகும்:- விநாயகப் பெருமானை மனமொழி மெய்களால் சிந்தித்து வாழ்த்தி வந்திப்பார்களது தீவினைகள் விரைவில் நீங்கும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற பணிமின் கனிந்து, -பதினோராந் திருமுறை.

மதியமும் வைத்திடும் அரன்:-

சிவபெருமான் சந்திரனைத் தரித்த வரலாறு

மலர்மிசை வாழும் பிரமனது மானதபுத்திரருள் ஒருவனாகியத் தட்சப் பிரசாபதி வான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகிற் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம்புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டொழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்து, பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதரிருவரும் பேரழகுடையரா யிருத்தலால் அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாரானாயினன். மற்றைய மாதர்கள் மனங்கொதித்து தம் பிதாவிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, குமுதபதியாகிய
சந்திரனை விளித்து “நின் அழகின்செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

அவ்வாறே சந்திரன் நாளுக்குநாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடமேகித் தனக்குற்ற இன்னல்களை எடுத்தோதி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர்பால் இதனைக் கூறுதியேல், அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனஞ் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண்புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தையென்று என் சொல்லைக் கேளான்; ஆதலால் நீ கயிலையடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுவாயேல் அப்பரம பிதா நின் அல்லலை அகற்றுவார்” என்று இன்னுரை பகர, அது மேற்கண்ட சந்திரன் திருக்கயிலைமலைச் சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியையடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறையேவணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரமதயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பமருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.

மலைமகள் மகிணன் மனமிரங்கி, அஞ்சேலென அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “நின் கலைகளில் ஒன்று நம் முடிமிசையிருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.

எந்தை யவ்வழி மதியினை நோக்கிநீ யாதுஞ்
சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்த மில்லையிக் கலையிவண் இருந்திடு மதனால்
வந்து தோன்றும்நின் கலையெலாம் தாடொறும் மரபால்.
-கந்தபுராணம்.
மதயானை:- இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று சக்திகளே விநாயகருக்கு மும்மதம்.

மத்தளவயிறு:- உலகமெல்லாந் தன்னகத்தில் அடங்கியுள்ள மணிவயிறு.

உத்தமி புதல்வன்:- உத்தம குணங்களுக்குப் பிறப்பிடமானவரும், முப்பத்திரண்டு அறம் வளர்க்கும் அன்னையும், “வாக்கே நோக்கிய” மங்கையுமானபடியால் உமாதேவியாரை “உத்தமி” என்றனர். அவ்வம்மையின் புதல்வன் என்றமையால் தாய்க்குரிய குணம் மகனுக்கு முண்டு என்று குறிப்பிடுகிறார்.

“இமவான் மடந்தை யுத்தமிபாலா”
-(சந்ததம்பந்தத்) திருப்புகழ்.

முத்தமிழடைவு:- தமிழிலக்கணங்களைஅகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது கன்னபரம்பரை. முத்தமிழடைவு என்பதை மஹாபாரதம் என்று வலிந்தும் பொருள் கொள்ளலாம்.

முதல்வோனே:- சகலதேவர்களுக்கும் முதற்கடவுளாகத் திகழ்வதாலும், சிவபுத்திரரில் முதல்வராக விளங்குவதாலும், யாவர் எக்காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் நினைத்துப் பூசிக்கும் முன்னைப் பழம் பொருளா யிலகுவதாலும் முதல்வன் என்றனர்.

உனதுதாயுலக சராசர மெவையுமொருங்குடன் பூத்தவளுந்தை
கனபரிபுரண சுகத்தனின் றமையன் காரியமுதல்வ னின்மாமன்
வனசனாதியர்கள் பணிபதனிவர் கள்வளமெலா முனக்குரித்தாமால்
வினவுசெல் வந்துட் செல்வனீபோரூர் வீறிவா ழாறுமாமுகனே.
-திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

முப்புரம் எரிசெய்த அச்சிவன்:- தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த இன்னலைக்களைவான் கருதி கண்ணுதல் கருணைகொண்டு முப்புரத்தையுமெரித்தனர். அதன் தத்துவமாவது, ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மத காரியமாம்.
அப்பணி செஞ்சடை யாதி புராதனன்
முப்புரஞ் செற்றன னென்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம் அப்புர
மெய்தமை யாரறி வாரே. -திருமந்திரம்

அச்சது பொடிசெய்த அதிதீரா:- தன்னை நினையாத காரணத்தால் சிவபெருமானேறியத் தேரின் அச்சை இற்றுப்போமாறு செய்த மகா தீரர். இங்ஙனம் அச்சு இற்ற இடம் இப்போதும் அச்சிறு பாக்கம் என வழங்கும். இத்தலம் தேவாரம் பெற்றது.

இபமாகி…..அக்கண மணமருள்பெருமாளே:-

குமாரக் கடவுள் திருமணங்கொள்ள வடிவமாறித் தினைவனஞ் சென்று பல விளையாடல்கள் புரிந்து, முடிவில் கிழவடிவங்கொண்டு குறவர் குலத்துதித்த கொம்பனாளை வேண்ட, அவ்வம்மையார் இணங்காது பிணங்கியகல அக்காலத்து விநாயகப் பெருமானை வருமாறு குமரகுரு நினைக்க, உடனே கணேசமூர்த்தி பெரிய யானை வடிவங்கொண்டு வந்து வள்ளிப் பிராட்டி யாருக்கும் குன்றெறிந்த குழகனாருக்கும் திருமணம் முடித்து வைத்தனர்.

கருத்துரை

விநாயகப் பெருமானைத் துதிப்பவர்கள்வினைகள் விரைவில் நீங்கும். அப்பெருமானை நினையாதார்க்குக் காரியங்கள் இனிது முடியாது. அப்படி நினையாத சிவபெருமானது தேரின் அச்சை ஒடித்தனர். தன்னை நினைந்த முருகவேளுக்குத் திருமணம் முடித்து வைத்தனர். ஆதலால் எடுத்துக் கொண்ட இந்நூல் இனிது முடிவதன் பொருட்டு அம் மகா கணபதியை வணங்குகிறேன்.

Scroll to Top