You cannot copy content of this page

திருமூலன் துதி

திருமூலன்

தனிப் பாடல்

ஆக்கியோன்:
சர்க்கரையப்ப வேலாயுத முத்துக்குமாரசாமி

கண்ணுக்கு இனியோன் காதலன் காதலுறு
பண்ணுக்கு உரியோன் பராபரன் பரமனுறை
விண்ணுக்கு வேதியன் வித்தகன் வேமிய
புண்ணுக்கு மருந்தோன் பூரணன் புண்ணியனே!

உத்தமன் நம்மை உய்விக்கும் நாதன்
நித்தமும் நம்மை நேசிக்கும் நேசன்
சித்தமும் சீவனும் உமையொரு பாகன்
பித்தனும் பிறையோன் பக்தனும் ஆமே!

அய்யம் தீர்த்த அய்யன் திருமூலன்
கைய்யில் ஏந்திக் காக்கும் திருமூலன்
மைய்யல் தீர்த்த மாதவன் திருமூலன்
செய்யும் செயலின் சேயோன் திருமூலன்!

திருமந்திரம்

புனித மந்திரம் மூலன் புனைந்த மந்திரம்
இனிய மந்திரம் ஈசன் இசைந்த மந்திரம்
கனிவு மந்திரம் காதல் கனிந்த மந்திரம்
முனிவ மந்திரம் மூத்த முனிவன் மந்திரம்!

சிந்தை தெளிவுற சீர்மிகு மந்திரம்
நிந்தை நிலையற நேரிசை மந்திரம்
எந்தை ஈசனின் இணைகழல் மந்திரம்
தந்தை மூலனின் தவபோத மந்திரம்!

பாசம் பதிபசு பயில்தரு மந்திரம்
நேசம் நெறிதரும் நிறையருள் மந்திரம்
தேசம் தெளிவுற தென்தமிழ் மந்திரம்
ஈசன் இறையருள் இன்னுயிர் மந்திரம்!

மூலன் முறைசெய்த முத்தமிழ் மந்திரம்
காலன் கனிவுறக் காத்திடும் மந்திரம்
மாலன் மகிழ்வுறும் மாதவ மந்திரம்
பாலன் மடிசேர் பார்மிகு மந்திரம்!

தேனாய்த் தித்திக்கும் தெள்ளமுது மந்திரம்
கோனாய்க் கோலோச்சும் கொற்றவன் மந்திரம்
ஊனாய் உள்ளிருக்கும் உள்ளொளி மந்திரம்
வானாய் வாழ்விக்கும் வளம்சேர் மந்திரம்!

போதனைப் பொருள்சேர்க்கும் போற்றிசை மந்திரம்
நாதனை நட்டுவிக்கும் நாற்றிசை மந்திரம்
வேதனை விடம்நீக்கும் வியத்தகு மந்திரம்
பேதமைப் பிணியகற்றும் பெரியதோர் மந்திரம்!

ஆக்கியோன்:

சர்க்கரையப்ப வேலாயுத முத்துக்குமாரசாமி

Scroll to Top