You cannot copy content of this page

அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில்

தேவன்குறிச்சி

தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் அமைந்துள்ளது.

கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti).

தேவன்குறிச்சியை மலையை நெருங்கியதுமே அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் தோரணவாயிலும் அடர்ந்து நிறைந்த மரங்களும் நம்மை வரவேற்கின்றன. கோவிலின் பின்னால் மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது.

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும்.இங்கே செய்யப்படும் சிறு பரிகாரமும் உடனடியாக நற்பலன்களைத் தரும். இந்த கோவிலை ஒட்டி ஒரு குகை இருக்கிறது.இந்தக் குகை மண்மூடி இருக்கிறது.இந்த குகைக்குள்ளாக ஒரு சித்தர் இன்றும் தவம் செய்து வருகிறார்.தகுதியுள்ளவர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இக்கோவில் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிகாலத்தில் (கி.பி 12 – 13ம் நூற்றாண்டில்) கட்டப்பட்டு, பின்னர் நாயக்கர் காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கொடிமரத்திற்கு அடுத்ததாக அழகிய கல்மண்டபம் காட்சியளிக்கின்றது. கல்மண்டபத்திலுள்ள ஒவ்வொரு தூண்களிலும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் அக்னீஸ்வரர் கருவறையும் அதனை அடுத்து கோமதி அம்மனின் கருவறையும் உள்ளது.

கோவிலின் பின்புறமுள்ள சிறுகுன்றில் முருகன் கோவிலும், அங்கிருந்து வலது பக்கமாக வந்தால் பசுமாடு சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் காட்சியை சிற்பமாக வடிவமைத்துள்ளனர். அடுத்ததாக சண்டிகேஸ்வரர், தட்சிணா மூர்த்தி சன்னதிகளும் அதனையடுத்து கோவிலின் முகப்பில் நவகிரகங்களும் உள்ளன. நவகிரகங்களுக்கு அருகிலுள்ள கல்வெட்டு ஒன்றில் “திருவற்கீசரமுடைய நாயனார்” என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர் இங்குள்ள தெய்வமாகிய சிவவனைக் குறிக்கும் பெயராக இருக்க வேண்டும்.

இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை சேர்ந்தவை.

இங்குள்ள 8 கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலும், ஒன்று கோவிலுக்கு பின்புறமுள்ள கிணற்றுக்குள் கல்வெட்டு தழைகீழாகவும் மற்றொன்று கோவிலுக்கு எதிர்புறம் விநாயகர் சன்னதியை ஒட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சுவற்றிலும் காணப்படுகின்றன.

கோவில் பின்புறமுள்ள கிணற்றுக்குள் சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் அமர்ந்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது.

கிணற்றின் சுற்றுச் சுவருக்காக எழுப்பப் பயன்பட்ட கற்களோடு இச்சிற்பம் உள்ள கல்லும், அதற்கு எதிர் திசையில் உள்ள சுவரில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் சேர்ந்து காணப்படுகிறது.

மகாவீரரின் சிற்பத்தில் அவருக்கு மேலே மரத்தின் கிளைகள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பம் மூலம் இவ்விடத்தில் சமணம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இதற்கு சான்றாக இங்குள்ள மலையில் குகை போன்ற அமைப்பும் அதன் உள்ளே கற்படுக்கையும் காணப்படுகிறது. குகைக்கு அருகே மருந்து அரைப்பதற்காக பாறையிலேயே வெட்டப்பட்ட குழியும் காணப்படுகிறது.

கோயிலின் முன்புறம் மேற்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மேற்குப் பகுதியில் உள்ள குளத்து மேட்டுச் சுவரில் இக்குளத்தை உருவாக்கி தந்தவரின் கல்வெட்டு காணப்படுகிறது.

குளத்தைச் சுற்றிலும் மருத மரமும் வேம்பு மரங்களும் நிறைந்துள்ளன. மேற்கு பகுதியில் உள்ள குளத்தின் அருகில் சுனை போன்ற அமைப்பு மலைப் பாறைகளுக்கு இடையே அமைந்துள்ளது.

இதனைச் சுற்றிலும் கற்களால் கோட்டைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் மலையிலிருந்து இச்சுனைக்கு வருமாறு பாறைகளுக்கு இடையே நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சுனைக்கு நடுவே சுவர் எழுப்பப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒன்றை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கானப் பயன்பாட்டிற்கும், மற்றொன்றை கோவிலுள்ள இறைவனுக்கு நீராட்ட பயன்படுத்துமாறும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் அபிஷேகமும்,ஆராதனைகளும் நடைபெற்றுவருகின்றன.

இந்த யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செவ்வரளிமாலை,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளோடு வந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டு நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 16 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்துவர தீராத பிரச்னைகள்,வழக்குகள்,சொத்துத் தகராறுகள் தீர்ந்துவிடும்.

வடக்குப் புறத்தில் அமைந்துள்ள பெரிய மலையில் ஆஞ்சநேயர் கோவிலும், அதற்கு மேலே மலை உச்சியில் பெருமாள் கோவிலும் உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் வரை செல்வதற்கு சிமெண்ட் படிகளும் அதற்கு மேலே உள்ள பெருமாள் கோவில் செல்வதற்கு மலையில் பாறைகளுக்கு இடையிலான கற்பாதையும் உள்ளது.

தேவன்குறிச்சி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1976-77 ல் இந்திய தொல்லியல் துறையினர் மேற்கோண்ட ஆய்விலிருந்து அங்கு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியேற்றம் இருந்ததற்கான பல தடயங்கள் கிடைத்துள்ளன. இப்பபகுதிகளில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள், இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து, இரும்புக் கால மக்களும் செப்புக் கால மக்களும் அங்கு வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது.

மேலும், பெருங்கற்காலத்தைச் ( ) சேர்ந்த பொருள்களான கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், கிளிஞ்சல்கள், வளையல்கள், முதுமக்கள் ஈமத்தாழிகள் போன்றவை கிடைத்துள்ளன.

கோவிலுக்கு அருகில் காணப்படும் பெரிய கற்பலகை போன்ற கல்லையும், அதனருகே காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள இரண்டு கற்களையும் பார்க்கும் பொழுது அது ‘கல்திட்டை’ (DOLMENS) ஆக இருக்க வேண்டும். கல்திட்டைகளின் காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலமாகும். எனவே இப்பகுதியானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்துள்ள பகுதி என்பதை அறியமுடிகிறது.

மிகக் கம்பீரமான மலையின் அடிவாரத்தில் தேவன்குறிச்சி ஊர் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

Scroll to Top