You cannot copy content of this page

தீபாவளி

தீபாவளி.

இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம், சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று.

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடும் பண்டிகையாகும். வாழ்வில் இருளைப் போக்கி ஒளிமயமாக்குவதே தீபாவளியன்று விளக்குகள் ஏற்றி வைக்கக் காரணமாகும். உயிர்களின் மூலமான சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் விதத்தில் விளக்குகள் ஏற்றி வைக்கப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியை சிவபெருமான் தமது சரிபாதியாகக் கொண்டு அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்ததை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியா தவிர இந்திய வம்சாவளியினர் வாழும் நாடுகள், முற்காலத்தில் இந்திய மன்னர்கள் ஆட்சி செய்த நாடுகள் ஆகியவற்றிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, மியான்மர், கயானா, மேற்கிந்தியத்தீவுகள், பிஜி உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

எண்ணெய்க் குளியல்

தீபாவளி அன்று நீராடுவதை புனித நீராடல்' என்றே குறிப்பிடுகின்றனர்.புனித நீராடல்’ என்று சொல்வதற்குக் காரணம், அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் உள்ள தண்ணீரில் கங்கையும், காவிரித் தாயும் இருப்பதாக ஓர் ஐதீகம். அதேபோல் எண்ணெய்யில் லட்சுமியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் வசிப்பதாக ஒரு நம்பிக்கை.

இந்நாள் ஆண்டுக்கு ஒருமுறை எனப் பலரும் எண்ணெய்க் குளியல் செய்யும் நாளாக அமைகிறது. சித்த மருத்துவத் தாத்பரியத்தின்படி உடலின் அதீத பித்தத்தை எண்ணெய்க் குளியல் மூலம் சமப்படுத்தலாம்

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

பொதுவாக எண்ணெய் குளியல் சூரிய உதயத்திற்கு முன் செய்யும் வழக்கம் இல்லை.

ஆனால் நரகசதுர்த்தி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்
எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கும்படி வரத்தை வாங்கினாள்.

மேலும் “நல்ல எண்ணையில் மகாலட்சுமியும்” “வெந்நீரில் கங்கையும்” இருக்க வேண்டு மென வரம் வாங்கினாள்.

இவ்வாறு குளிப்பவர்களுக்கு அகால மரணமும்,நரக பயமும்,விலகும் என்று பகவான் அருளினார்.

வட நாட்டில் பல இடங்களில் தீபாவளி நாளை குபேர பூஜை யாகவும்,
மகா லட்சுமி பூஜை யாகவும், கொண்டாடுகிறார்கள்.

புது கணக்குகள் அன்று ஆரம்பிப்பார்கள். தீபாவளி நாளும், அதை அடுத்த அமாவாசை நாளும் மிகமிகப் புனித நாளாகும்.

உடலில் தேய்க்க எண்ணெய் :

100 -மிலி நல்லெண்ணையில், மிளகு 50 -எண்ணிக்கையில் போட்டு மித மாக காய்ச்சவும் மிளகு அனைத்தும் மிதந்து புகை வரும் சமயம் இறக்கி வடித்து சூடு ஆறியவுடன் தலை,மற்றும் உடல் முழுதும் தேய்த்து 15 -நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கவும்.

இதனால் உடலில் உஷ்ணம் நீங்குவதுடன், தோலின் மேல் பகுதியில்
இரத்த ஓட்டம் நன்கு சீராகும், பாக்டீரியாவினால் ஏற்ப்படும் தொற்று
அறவே நீங்கும்.

குளிக்க மூலிகை வெந்நீர் :

1 -ஆலம்பட்டை,
2 -அரசம் பட்டை,
3 -அத்திப்பட்டை,
4 -புரசம்பட்டை,
5 -மாவுலிங்கப்பட்டை

ஐந்து மரப் பட்டைகளையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி இடித்து வெந்நீர் காய்ச்சும் போது போட்டு வெந்நீர் கொதித்தவுடன் குளிக்கவும்.

இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தி கிட்டும்.

பிறகு புத்தாடைகள் உடுத்தி முதலில் உண்ணும் “தீபாவளி லேகியம்”
செய்முறை :

1 – சுக்கு -50 -கிராம்
2 – சித்தரத்தை 25 – கிராம்
3 -ஓமம் 10 – கிராம்
4 – அரிசி திப்பிலி -25 – கிராம்
5 – கண்டந் திப்பிலி -25 -கிராம்
6 – விரலி மஞ்சள் -ஒரு துண்டு
7 -நெய் – 50 – கிராம்
8 – நல்லெண்ணெய் -50- கிராம்
9 – பனை வெல்லம் – 200 -கிராம்

மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடி த்து பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது மருந்து பொடியை போட்டு கிளறவும்.

லேகியம் போல் இறுகி வரும் பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது எடுத்து விரல்களில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.

தீபாவளி அன்று அதி காலையில் எண்ணை ஸ்நானம் செய்ததும் புத்தாடை கள் அணிந்து கொண்டு முதலில் “தீபாவளி லேகியம்” ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுவைத்து சாப்பிடவும்.

இதனால் உடலில் குளிர்ச்சி சேராமல் தடுக்கும், ஜலதோஷம் பிடிக்காது.கடலை மாவு,நெய் சேர்ந்த பலகாரங்கள் உண்டாலும் வயிறு மந்தமோ, அஜீரணமோ ஏற்ப்படாது.

இந்த லேகியம் பலகாரங்கள் உண்ட பிறகு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட அனைத்தும் ஜீரணமாகி செரித்து விடும்.

தீபாவளியின் கதைகள்….

தீபாவளிக்கு ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதை

ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

பிற கதைகள் ..

விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.

வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

4 ம் நாளை யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

பட்டாசு வெடிப்பது ஏன்:

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களை தவிர பிற மதத்தவரும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.

சமண மதக் கடவுள் மகாவீரர் இந்த நாளில் தான் நிர்வாணம் எனப்படும் மோட்சத்தை அடைந்ததாக நம்பப்படுகிறது. இதனால் மகாவீரரின் நினைவாக சமணர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.

இதே போல, சீக்கியர்களும் திபாவளி பண்டிகையை ’பண்தி சோர் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைப்பிடியில் இருந்து தப்பிய நாள் இதுவாகும். மேலும், இதே நாளில் தான் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Scroll to Top